கணிதம் என்பதொரு தனி பாடம் அல்லது பாடப் புத்தகம். அதை கற்று மதிப்பெண் பெற வேண்டும் எனும் மனநிலையிலிருந்து விடுபட்டு, வாழ்க்கையின் ரகசியம் கணிதம்; அதைக் கண்டடைய வேண்டும் என்பதாக அந்தத் துறையை நோக்கிக் குழந்தைகள் ஈர்க்கப்பட வேண்டும் - ஈமிங் காவோ.
தமிழ்ச் சூழலில் ‘கணக்கதி காரம்’ படைத் தோரும், தேசிய அளவில் ஆரியப்பட்டர், பாஸ்கரர் போன்ற நாளந்தா பல்கலைக்கழக காலத்து கணித அறிஞர்களும், பிற்காலத்தில் சீனிவாச ராமானுஜன் என ஒரு காலத்தில் கணிதத்தில் இந்தியா கொடிகட்டிப் பறந்தது.
இன்றோ இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போது இந்தியாவில் எங்கோ ஒரு கல்லூரியில் கணிதத் துறை மூடப்படக்கூடும். அந்த அளவுக்குப் பல கல்லூரிகளில் கணிதம் படிக்க இளங்கலை யிலும் முதுகலையிலும் ஒருவர் கூட சேர்வதில்லை. பள்ளிக் கூடங்களிலும் கணக்கு என்றாலே கசப்பு எனும் மனநிலை பரவியுள்ளது. தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகள் கணிதம் இன்றி இயங்காது என்றுகூடப் புரிந்துகொள்ளாமல் அவற்றை நோக்கி இளைஞர்கள் ஓடுகிறார்கள்.
எண் விளையாட்டு: கணிதப் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டுமென ஐரோப்பிய நாடுகளில் கல்வி யாளர்கள் கவலையோடு குரல் கொடுக்கிறார்கள். கணிதம் கற்பிக்கப்படாவிட்டால் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கிலாந்து கல்வி அமைச்சர் அறிக்கை வெளியிடுகிறார்.
இதற்கிடையில் இன்றையச் சூழலில் பீசா (PISA), டிம்ஸ் (TIMSS) முதலான உலகளாவிய தேர்வுகளில் சீன மாணவர்கள் எப்போதும் கணிதத்தில் முதல் இடம்பிடிக்கின்றனர். மற்ற நாடுகளால் மாணவர்களிடத்தில் ஊட்ட முடியாத கணிதக் காதலை சீனாவால் எப்படிப் புகட்ட முடிந்தது? ரகசியத்தைச் சொல்கிறது, ‘சீனாவில் 21ஆம் நூற்றாண்டு கணிதக் கல்வி’ (The 21st Century Mathematics Education in China) புத்தகம்.
முதல் கட்டமாக, துளிர் வகுப்புகளில் எழுத்துக்களை விட எண்களே, சீனக் குழந்தைகளுக்கு விளையாட்டுகளின் மூலம் அறிமுகம் செய்யப்படு கிறது. கன்பூசியஸின் கல்விச் சிந்தனையிலிருந்து கணிதம் எவ்வாறு தனி தத்துவ அச்சாரமாக பிரிந்தது என்பதைத் தனிப் பாடமாக வைத்திருக்கிறார்கள்.
கணிதத்தால் வென்றவர்களின் கதைகளைச் சிறாருக்குப் பாடமாகப் புகட்டுகிறார்கள். எண் குச்சிகள், டிஜிட்டல் அபாகஸ் நோக்கி பிள்ளைகள் ஈர்க்கப்படுகின்றனர். சீனாவில் ஒவ்வொரு பள்ளியும் கணித இணையச் செயலிகளைப் புதிதாகக் கண்டுபிடித்து களத்தில் இறக்குவதில் பெரும் போட்டியே நிலவுகிறது.
கணித ஏணி: இந்திய வகுப்பறைகளில் எல்லாரும் ஒரே வேகத்தில் பயில வேண்டும். மாணவர் ஒருவர் கணிதத் தேன் மொழியைக் கச்சிதமாக உள்வாங்கி, மளமளவென்று குறிப்பிட்ட கணித சமன்பாட்டுக்குத் தீர்வு கண்டுவிட்டாலும் அடுத்த பயிற்சிக்குத் தாவ முடியாது. சீனாவில், நான்காம் வகுப்பு கணிதப் பாடப்புத்தகத்தை மாணவர் யாரேனும் முழுவதுமாக முடித்துவிட்டால், மறுநாளில் இருந்தே அவர் ஐந்தாம் வகுப்பு கணிதப் புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இப்படி கணிதத்தை வருட அடிப்படையில் பிரிக்காமல் மாணவரின் திறன் அடிப்படையில் கற்பிக்கும் நெகிழ்வான போக்கு பின்பற்றப்படுகிறது. கல்லூரிக் கணிதத்தைப் பள்ளியிலேயே முடித்து விடுபவர்கள், சீனாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அளவுக்குக் கணிதத்தின் சொர்க்கபுரியாக அந்நாடு மிளிர்கிறது.
ஆசிரியர்களின் வழிகாட்டல், பெற்றோரின் ஒத்துழைப்பு, சிறுவயதிலேயே கணித அரங்குகளில் பங்கேற்றல், கணிதக் கல்விக்கு அரசின் ஆதரவு போன்றவற்றைப் பற்றி இந்நூல் பேசுகிறது. நாம் எங்கே தவறினோம் என்பதைச் சிந்திக்க வைக்கும் அரிய நூல்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com