கற்றலின் வலி தெரியாமல் குழந்தைகளை மகிழ்ச்சியான மேதைகளாக வைத்திருப்பதே கல்வியின் நோக்கம் - ஒண்டர் விச் மாக் ஜெ. சைமன்.
உலக அளவில் மகிழ்ச்சியான குழந்தைகளின் பட்டியல் அண்மையில் வெளியானது. முதலிடத்தில் நெதர்லாந்து குழந்தைகள் இருப்பதாக வாசித்ததும், இது எப்படி சாத்தியம் என்கிற கேள்வி எழுந்தது. விடை, ‘தி டச் வே இன் எஜுகேஷன்’ ( The Dutch Way in Education) நூலில் உள்ளது.
15 அரிய பாடங்கள்: ‘நெதர்லாந்து கல்வியின் சிறப்பு அம்சங்களிலிருந்து உலகம் கற்க வேண்டிய 15 பாடங்கள்’ என இந்நூலில் ஓர் உட்தலைப்பு உள்ளது. அங்கு, 5 - 16 வயது வரையிலான குழந்தைகள் கட்டாயக் கல்வி சட்டத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நடைமுறையில் பெரும்பாலான குழந்தைகள் நான்கு வயதிலேயே பள்ளிக் கல்வியைத் தொடங்கிவிடுகின்றனர். 16 வயதுக்குப் பிறகு இடைநிலைக் கல்வி அல்லது தொழில் கல்வியைத் தொடரலாம். இதெல்லாம் நம் நாட்டிலும் இருப்பதுதானே எனக் கேட்கலாம்.
நெதர்லாந்தில் ஆண்டுதோறும் தேசிய அளவில் ஆசிரியர் குழு அமைக்கப்பட்டு, கல்வியின் சாயல் மாற்றப்படுகிறது. பாடப் புத்தக தேர்வுக் குழுக்களில் மாணவர்களும் இடம்பெறுகிறார்கள். ‘ஜிம்னாசியம்’ என அழைக்கப்படும் பள்ளிகளில், ஆண்டு தொடக்கத்தின்போது தங்களுக்கான ஆசிரியர்களை மாணவர்களே தேர்வு செய்யலாம்.
அங்கு வீட்டுப் பாடம் கொடுக்கப்படுவதில்லை. மாணவர்களின் மனநலம், ஓய்வு, விளையாட்டு ஆகியவற்றுக்கும் கல்விக்கு இணையான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நம் நாட்டில் தேர்வு அட்டவணைகள் இன்றி, கல்வியை நினைத்துப் பார்க்க முடியுமா? நெதர்லாந்தில் மாணவரின் விருப்பப்படி ஒரு நாளைத் தெரிவுசெய்து தேர்வு எழுதலாம். இப்படிப்பட்ட பல அம்சங்கள் நெதர்லாந்து கல்வியை உலகின் மகிழ்ச்சியான கல்வியாக வைத்திருக்கின்றன.
நோபல் தரும் கல்வி: அங்கு டச்சு, ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. இரு மொழிகளிலும் சம அளவு முக்கியத்துவத்தோடு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை அந்தந்த ஆசிரியர்களே வடிவமைக்க அனுமதி தரப்படுகிறது. குழுவாகப் பிரிந்து வேலை செய்தல், திட்டங்களை வகுத்தல் இப்படி அனைத்திலும் மாணவர்களும் பங்கு வகிப்பதால் நெதர்லாந்தின் மாணவர்கள் புத்திசாலித்தனத்தோடு, சமயோசித அறிவுகொண்ட மாணவர்களாக மிளிர்வதாக இந்நூல் சொல்கிறது.
சர்வதேச அளவில் பீசா (PISA) உள்பட 17 தேர்வுகளில் நெதர்லாந்து மாணவர்கள் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடுகிறார்கள். 22 முறை அந்த நாட்டு அறிவியாலாளர்கள் நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளனர் என்பது அவர்களது கல்வியின் வெற்றியைப் பறைசாற்றுகிறது. இந்தப் பள்ளிகளில் சீருடைகள்கூட இல்லை. அவரவர் தனிப்பட்ட அடையாளத்தைப் பள்ளி மதிக்கிறது.
அதேநேரம் ஏழை, பணக்காரன் வேற்றுமை இன்றி அனைவருக்கும் தரமான ஒரே மாதிரியான கல்வி கிடைப்பதை கல்வித் துறை உறுதிசெய்கிறது. நம் ஊரைப் போலப் பல பள்ளிகளின் பெயர்களில் பெரியபெரிய பேருந்துகளை அங்குப் பார்க்க முடியாது. பள்ளி வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் சைக்கிளில் மட்டுமே பள்ளிக்கு வர முடியும், நடந்தும் வரலாம். அனைத்துமே அருகமைப் பள்ளிகள். குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்ட கல்வி முறை குறித்த இந்நூலை வாசிக்கத் தவறவிடக் கூடாது.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com