தொடர்கள்

கட்டுப்பாடு + கருணை = அச்சமற்ற கற்றல்! | வகுப்பறை புதிது 33

ஆயிஷா. இரா.நடராசன்

சுயகட்டுப்பாட்டை ஒரு மாணவரின் இயல்பாக மாற்றுவதில்தான் கல்வியின் மேன்மை இருக்கிறது - வில்லியம் மொய்

கற்றலின் எழுச்சி, பயிற்சியில் உள்ளது; பயிற்சியின் எழுச்சி சுய கட்டுப்பாட்டில் உள்ளது; சுய கட்டுப்பாட்டின் எழுச்சி சமூகத்தின் மீதான உங்களுடைய கருணையில் உள்ளது என்கிற அடிப்படையுடன் மணிக்கணக்கில் நடத்தப்படும் பயிற்சியே குங்ஃபூ கலை.

கற்றல், கற்பித்தல் சார்ந்த புதிய வகுப்பறையை அறிமுகப்படுத்துகிறது ‘குங்ஃபூ பயிற்சியாளரைப் போல் வாழுங்கள்’ (Live Like a Kung Fu Master நூல். ஒன்பது வயது சிறுவன் விபத்தில் சிக்கி இடது கையை இழக்கும் துயரகரமான சம்பவத்தோடு புத்தகம் தொடங்குகிறது. அவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட குங்ஃபூ வகுப்பில் தாய் சேர்த்துவிடுகிறார். வகுப்பில் ஒரு வகைக் குத்து மட்டுமே நாள்தோறும் அவனுக்குச் சொல்லித் தரப்படுகிறது. சிறுவனுக்கு அலுத்துப் போகிறது.

பலவீனமே பலம்: உள்ளூரில் நடைபெறும் குங்ஃபூ போட்டியில் கலந்துகொள்ள பயிற்சி யாளர் அவனை அனுப்புகிறார். ஒரு கை இழந்த தம் மகனை எண்ணித் தாய் வருந்துகிறார். சிறுவனோ அச்சமின்றி போட்டியில் களம் இறங்குகிறான். ஒவ்வொரு கட்டத்திலும் ஆசிரியர் பயிற்றுவித்த ஒரு குத்தை மட்டுமே பயன்படுத்துகிறான். ஆச்சரியப்படும் வகையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிவிட்டான். இறுதிச் சுற்றில் அவனைவிட பல மடங்கு உடல் பெருத்த போட்டியாளர்.

சிறுவன் இறுதிச் சுற்றில் பங்கேற்க வேண்டாம் என்று பயிற்சியாளரிடம் சிறுவனின் தாய் மன்றாடுகிறார். போட்டியிடட்டும் என்கிறார் பயிற்சியாளர். இறுதிச் சுற்றிலும் அந்த ஒரே ஒரு குத்தைப் பயன்படுத்தி கோப்பையைத் தட்டிச் செல்கிறான் சிறுவன். வியப்பில் வெற்றிக்கான சூட்சுமத்தை ஆசிரியரிடம் சிறுவன் கேட்கிறான்.

ஆசிரியர், “இது விநோதமான குத்து. அதைத் தடுக்க வேண்டுமென்றால் எதிராளி, உனது இடது கையை முறுக்க வேண்டும். உனக்குத்தான் இடது கை இல்லையே, எனவே நீதான் வெல்வாய். அதுவே நடந்தது” என்கிறார். இந்த அற்புதமான அனுபவத்தை விவரிப்பதன் மூலம், ஒரு மாணவரின் பலவீனத்தைக்கூடப் பலமாக மாற்றும் மந்திர சக்தி ஆசிரியரிடம் மட்டுமே இருக்கிறது என்கிறது இந்நூல்.

விழித்திரு! - வகுப்பறையில் அனைத்து மாணவர்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் உடல் வேறுபடுகிறது, மனம் வேறுபடுகிறது. அவரவர் தனித்துவம் அறிந்து குங்ஃபூ கற்பிக்கிறார் ஆசிரியர். தான் கற்பித்ததை ஒவ்வொரு குழந்தையும் முழுமையாகப் பயிற்சி செய்து முடித்துவிட்டதா என அறியாமல், அடுத்த பாடத்துக்கு அவர் நகர்வதே இல்லை.

கடும் பயிற்சியின் ஊடாக தான் கற்றுணர்ந்த பாடத்தை புதிய மாணவர்களுக்கு வாகை சூடிய மாணவர் கற்பிக்கும் விதியும் இதில் முக்கியத்துவம் பெறுகிறது. கற்றுக்கொடுத்தால் மட்டுமே நீ கற்றுக்கொள்வாய். வகுத்தல் பாடத்தை 8ஆம் வகுப்பு மாணவர் 2ஆம் வகுப்பு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது என்பது ஆசிரியர்களின் மெனக் கெடலைவிட மென்மையாக இருக்கும் என்பதும் உண்மைதானே.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

SCROLL FOR NEXT