எதிர்காலத்துக்கான கல்வியை நீங்கள் இத்தனை ஆண்டுகளில் வழங்கி இருப்பது உண்மை என்றால்... விமானங்கள் பறந்தபடி இப்போதும் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசும் போர்கள் ஏன் தொடர்கின்றன? - தாமஸ் ஜெரோம் பேக்கர்.
மாணவர்களைச் சான்றிதழ்கள், பட்டங்கள் பெற வைத்து எப்படியாவது அவர்களை வேலைக்கு அனுப்பிவிடுவது என்பதாக மட்டுமே கல்வியின் நோக்கம் இருக்கும் வரையில் பொதுநல சமூகத்தை எப்படி உருவாக்க முடியும் என்று தாமஸ் ஜெரோம் பேக்கர் கேள்வி எழுப்புகிறார். ‘தி இன்டர்நேஷனல் பக்காலோரியட் சர்வதேச வளர்ச்சிக்கான கல்வி’ எனும் தலைப்பில் அவர் எழுதியுள்ள புத்தகத்தில்தான் இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
உண்மையான சர்வதேச கல்வி: ‘இன்டர்நேஷனல் பக்காலோரியேட்’ என்பது உலகின் 140 நாடுகளில் அறிமுகமாகிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வித் திட்டம் ஆகும். சர்வதேச இளங்கலை டிப்ளமோ திட்டம் என்று இது அழைக்கப்படுகிறது. வழக்கமான பாடத் திட்டத்தைத் தாண்டி படைப்பாக்கம், பூமி பாதுகாப்பு, மனிதநேய சமூகப் பாடம், பாலின சமத்துவம் என்று அது விரிவுபடுத்தப்படுகிறது.
எப்பேர்ப்பட்ட உயர்கல்வியில் வேண்டுமானாலும் நுழைவதற்கான சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகுதியை இந்தக் கல்வி வழங்குகிறது. 1960களில் ஜெனிவாவில் சர்வதேச கல்வியாளர் குழு ஒன்றினால் இது அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான தேர்வுகளும் சர்வதேச அளவில் நடத்தப்படுகின்றன.
மே மாதத்தில் நடக்கும் தேர்வுகள் வடக்கு அரைக்கோள கண்டங்களின் பள்ளிகளுக்கும், நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் தேர்வுகள் தெற்கு அரைக்கோள கண்டங்களின் பள்ளிகளுக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் என்றால் எழுத்துத் தேர்வு அல்ல. ஆய்வேடு சமர்ப்பித்தல், கருத்தரங்கில் உரை நிகழ்த்துதல், நேர்காணல் ஆகிய வடிவிலான தேர்வுகள்.
என்ன வித்தியாசம்? - நம்முடைய கல்விமுறைக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? 1% கூட மனப்பாடம் செய்யும் கல்வி அவர்களிடம் இல்லை. அவர்களுடைய பாடப் பொருட்கள் வித்தியாசமானவை முழுமையானவை. உதாரணமாக, “எந்தப் பழம் புளிக்கும்?” என்று கேட்டால் அறிவாற்றல் களத்தில் நின்று எலுமிச்சை என்று நாம் சொல்லி விடுவோம்.
இதனை உணர்வு களமாக மாற்றுகிற போது ஏன் எலுமிச்சை புளிக்கிறது என்கிற கேள்வியாக மாறி அதில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது என்கிறோம். இதுவே புரிதல் களம். அடுத்த களம் பகுத்தாய்தல். இந்தக் களத்தில் வேறு எந்தப் பழத்தில் எல்லாம் சிட்ரிக் அமிலம் இருக்கிறது என்று கேட்டு ஆரஞ்சு பழம், நார்த்தை என்று பதில் சொல்கிறோம். இந்த இடத்தோடு நம்முடைய கல்வி முடிந்து விடுகிறது.
ஆனால், இன்டர்நேஷனல் பக்கலோரியாட் கல்வி மேலும் இரண்டு படிநிலைகள் கொண்டதாகும். எந்தப் பழத்தில் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளது என்று இறுதியாக ஆய்வுக் களத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. ஆய்வுக்களத்தின் வழியே படைப்பாக்கக் களம் என்கிற ஒன்றை அவர்கள் அறிமுகம் செய்கிறார்கள்.
இந்தப்படைப்பாக்கக் களத்தில் நீங்கள் எலுமிச்சையை ருசியான பழச்சாறாக்கத் தயாரிக்கிற தொழிற்சாலைகளைப் பற்றிக் கற்றுக்கொள்கிறீர்கள். அதிலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல், கலப்படமற்ற முறையில் மக்கள் பயன்படுத்தக்கூடிய பொருளை அறிமுகம் செய்வதற்கான சந்தை நுணுக்கங்கள், சட்டங்கள் முதலியவற்றை முழுமையாக அறிந்துகொள்ள அவர்களுடைய கல்வி வழிவகுக்கிறது.
இது அறிவியலுக்கான முன்னுதாரணம் மட்டுமே. செயற்கை நுண்ணறிவு எப்படி வேலை செய்கிறது என்பதைக் கற்பதை விட சமூகம் அதனால் எத்தகைய பாதிப்பை அடையப்போகிறது, நம் பங்கு என்ன என்பதைச் சேர்த்து அவர்கள் போதிக்கிறார்கள். குழந்தைகள் சிறுவயதிலேயே விவாதங்களின் மூலம் மறுமலர்ச்சி சமூகம் குறித்த நோக்கங்களை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்த அம்சங்கள் நம் கல்வியில் இடம்பெறக் கூடாதா என்று இந்தப் புத்தகம் ஏங்க வைக்கிறது.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com