உண்மையான ஆசிரியர் தன்னுடைய நிம்மதியை வகுப் பறையின் நான்கு சுவர்கள் தவிர வேறு எங்கும் போய்த் தேட முடியாது. புனிதத் தலங்களுக்குச் சென்றாலும் எத்தனை புனித யாத்திரைகள் மேற்கொண்டாலும் உங்கள் நிம்மதி, உங்கள் போதி மரம் எப்போதும் உங்கள் வகுப்பறைதான் - ஜநோஸ் கோர்ச்சாக் குழந்தைகள் தங்களுக்கென்று உரிமைகளைக் கொண்டிருக்கின்றனர்.
தவறு செய்யும் உரிமை, சுயமாகக் கருத்துகளை உருவாக்கிக் கொள்ளும் உரிமை, தங்களுக்கான மரியாதையைப் பெரும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஏனெனில் அவர்கள் குழந்தைகள் மட்டுமல்ல அவர்களும் மனிதர்களே என்று உலகிற்கு முதலில் பிரகடனம் செய்தவர் ஜோனஸ் கோர்ச்சாக்.
குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தும் உரிமை யாருக்கும் இல்லை என்றவர். குழந்தைகளின் ஆசிரியர் என்றும் குழந்தைகள் உரிமைப் போராளி என்றும் வரலாற்றில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட இவரது வாழ்க்கை வரலாறு மற்றும் எழுத்துகளின் தொகுப்பு, ‘தி கிங் ஆஃப் சில்ட்ரன்’. பெட்டி ஜீன் லிஃப்டன் எழுதிய நூல் இது.
ஆசானுக்குத் தண்டனை: கோர்சாக்கின் இயற்பெயர் ஹென்ரி கோல்ட்ஸ்மித். போலந்து நாட்டில் குழந்தை மருத்துவராக இருந்து ஆசிரியராக மாறியவர். 1919-ல் குழந்தைகள் அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகம் செய்து உலகை அதிரச் செய்தவர். ஆசிரியருக்கான முதல் தகுதி எத்தகைய எதிர்பார்ப்பும் இன்றி தன் மாணவர்களிடத்தில் முழுமையான அன்பு செலுத்துவது என்பதை தன் வாழ்நாளில் கடைப்பிடித்துக் காட்டியவர்.
வார்சாவில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றின் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றி அங்கு மூன்று முக்கியமான அம்சங்களை அறிமுகம் செய்தார். ஒன்று, அந்தப் பள்ளியில் குழந்தைகளே நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். ஆசிரியர் உள்பட யார் தவறு செய்தாலும் வாரம் ஒருமுறை ஒரு வழக்கு மன்றம் குழந்தைகளால் நடத்தப்பட்டது.
இந்த வழக்கு மன்றத்தில் கோர்சாக்கே இரண்டு முறை தண்டனை பெற்றுள்ளார். இரண்டாவது, இந்தப்பள்ளியில் மாணவர் இதழ் பிரசுரிக்கப்பட்டது. தங்கள் திறன்களைச் சக மாணவர்கள் மத்தியில் வெளிப்படுத்தவும், தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும் அந்தப் பத்திரிகை ஒரு பள்ளி வளாக இதழாகப் பயன்படுத்தப்பட்டது.
மூன்றாவது, குழந்தைகளே பாடப் புத்தகங்களைத் தேர்வு செய்து தங்களுக்குள்ளேயே கேள்வித் தாள்களையும் வடிவமைத்துக் கொண்டு ஒருவருடைய விடைத்தாள்களை மற்றொரு பிரிவு திருத்துவது என்று அவர்களுக்குள்ளாகவே ஒரு தேர்ச்சி முறை வடிவமைக்கப் பட்டது.
மாணவர்களுடன் இறுதி மூச்சு: இந்தப் புத்தகம் அவருடைய கல்வி சீர்திருத்தங்களைப் பற்றி மட்டுமே பேசவில்லை. ஓர் ஆசிரியரின் புனிதப் பயணம் என்று அவரே அறிவித்துக் கொண்ட மிக முக்கியமான ஒரு கட்டத்தைப் பற்றியும் பேசுகிறது. 1942-ல் ஜெர்மனியின் ஹிட்லர் படைகள் போலந்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. கோர்சாக்கேவின் ஆதர வற்றோர் இல்லத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 196 மாணவர்களையும் யூதர்கள் என்று பட்டியலிட்டு கொலை முகாமுக்கு அழைத்துச் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தந்தையோ அல்லது தாயோ யூதராக இல்லாத பட்சத்தில் கோர்சாக் தன்னை விடுவித்துக் கொள்ளலாம் என்று அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஓர் ஆசிரியராக கோர்சாக் அந்த அழைப்பை மறுத்து குழந்தைகளில் ஒருவராக அவர்களை வழிநடத்தி மரண முகாமை நோக்கிச் சென்றார்.
புது ஆடைகளை அணிந்து கொண்டு 196 குழந்தைகளும் தங்கள் நூலகத்தில் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தை நெஞ்சில் அணைத்தபடியே மரண முகாமுக்குச் சென்று உயிர் விட்ட பொழுது அவர்களில் ஒருவராக உயிர் துறந்தவர் கோர்சாக் எனும் அந்த அற்புத ஆசிரியர். கோர்சாக்கின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாணவரும் வாசிக்க வேண்டிய புனித நூல்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com