வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார் ரம்யா. கடந்த மாதம் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு, ''உங்களது கிரெடிட் சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கிறது. அதனை அடிப்படையாக வைத்து உங்களுக்கு ரூ.3000 கடன் வழங்குகிறோம். ஒரே நிமிடத்தில் கடனை பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்'' என மெசேஜ் வந்தது.
பண கஷ்டத்தில் தவித்த ரம்யா, எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த லிங்கை க்ளிக் செய்தார். அடுத்த கணமே ப்ளே ஸ்டோர் மூலம் ஆன்லைன் லோன் ஆப் ஒன்று டவுன்லோடு ஆனது. அதில் நீளமாக கொடுக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை முழுமையாக படிக்காமல், எல்லாவற்றுக்கும் ஓ.கே. கொடுத்தார்.
ஆதார் கார்டு எண், பான்கார்டு எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றையும் சமர்ப்பித்தார். அடுத்த கணமே ரம்யாவின் வங்கி கணக்கில், பிடித்தம் போக ரூ.2500 வரவு வைக்கப்பட்டது.
யாரிடமும் கடன் கேட்காமல், எதனையும் அடகு வைக்காமல், வங்கிக்கு அலையாமல் உட்கார்ந்த இடத்திலே 5 நிமிடத்துக்குள் கடன் கிடைத்ததால் ரம்யா மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த ஒரு வாரத்தில் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு, ‘நீங்கள் வாங்கிய ரூ.3000 கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.5500 செலுத்த வேண்டும்' என மெசேஜ் வந்தது.
அதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா, ‘‘நான் ஒரு மாதத்திற்கு பிறகே கடனை திருப்பி செலுத்துவதாக கூறி, கடனை பெற்றேன். ஒரு வாரத்திற்குள் பணத்தை கேட்பது ஏன்?''என பதில் அளித்தார். அதற்கு பதில் வரவில்லை.
15 நாட்களுக்கு பிறகு ரம்யாவுக்கு மீண்டும் ஒரு மெசேஜ் வந்தது. அதில், ‘‘இரு வார வட்டியுடன் சேர்த்து நீங்கள் ரூ. 10,000 செலுத்த வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டது. திரும்பவும் ரம்யா காட்டமாக பதில் மெசேஜ் அனுப்பினார். அதற்கும் பதில் வரவில்லை. 30வது நாளில், ‘‘ரூ.30,000 கடனை உடனடியாக அடைக்க வேண்டும். இல்லாவிடில் உங்களது கிரெடிட் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்த சில நிமிடங்களில் வாட்ஸ் அப் அழைப்பு வந்தது. அப்போது இந்தியில் பேசிய நபர், கடனை உடனடியாக செலுத்தாவிடில் உங்களது ஆதார் கார்டு, பான் கார்டு ப்ளாக் செய்யப்படும்'' என மிரட்டினார். அதற்கு பயந்துகொண்டு வாங்கிய கடனை இருமடங்காக சேர்த்து ரூ.6000 செலுத்தினார்.
அடுத்த சில தினங்களுக்கு அழைப்புகள் வரவில்லை. திடீரென ஒருநாள் மீண்டும் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.அப்போது இந்தியில் பேசிய நபர், ‘‘வட்டியுடன் சேர்த்து நீங்கள் ரூ.50,000 செலுத்தவேண்டும். இல்லாவிடில் உங்களது புகைப்படத்துடன் ‘‘நீங்கள் ஒரு மோசடிக்காரர்'' என அச்சிட்டு உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி விடுவோம்'' என மிரட்டினார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என செல்போனில் பதிந்திருந்த அனைத்து தொலைபேசி எண்களுக்கும் ஒரு மெசேஜ் வந்தது. அதில், ‘‘இவர் (ரம்யா) ஒரு ஏமாற்றுக்காரர். வாங்கிய கடனை செலுத்தாமல் ஏமாற்றுகிறார். அவரது கடனை திருப்பி செலுத்துமாறு வலியுறுத்தவும்'' என புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் உறவினர்கள் ரம்யாவின் வீட்டுக்கே வந்து, ‘‘எங்கள் பெயரை சொல்லிஏன் கடன் வாங்கினாய்?'' என சண்டை போட்டனர். ஆனால், அவர் யாருடைய பெயரையும் ஜாமீனாக குறுப்பிட்டு கடன் வாங்கவில்லை. அந்த செயலியை டவுன்லோடு செய்த போதே, அவரது செல்போனில் இருந்த அனைத்து எண்கள், புகைப்படங்கள், குறுஞ்செய்தி, இமெயில், வங்கிக் கணக்கு விபரம் ஆகியவற்றை ஆக்சஸ் செய்ய அனுமதித்து இருந்தார். அதன் காரணமாகவே அனைத்து எண்களுக்கும் அவ்வாறு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் ரம்யாவின் வீட்டில் பெரிய கலவரமே வெடித்தது. குடும்பத்தாரின் உதவியோடு நகையை விற்று உடனடியாக ரூ.30 ஆயிரம் கடன் கட்டினார். அதன் பிறகும் அந்த ஆன்லைன் செயலி கடன் கும்பல் அவரை விடவில்லை. மேலும், ''ரூ. 30 ஆயிரம் செலுத்தினால் கடன் கணக்கை மூடிவிடலாம். இது தான் கடைசி வாய்ப்பு'' என சலுகை காட்டுவதாக கூறினர்.
அந்த தொகையை 3 நாட்களுக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. மிரட்டலுக்கு பயந்து, அடுத்தடுத்து வந்த நூற்றுக்கணக்கான அழைப்புகளையும் எடுக்கவில்லை. குறுஞ்செய்திகளுக்கும் பதிலளிக்கவில்லை. ரம்யா அச்சத்தில் உறைந்திருந்தார்.
அந்த நேரத்தில் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு பகீர் குறுஞ்செய்தி வந்தது. அதாவது, ரம்யாவின் புகைப்படம் வேறொரு ஆணுடன் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் கதறி அழுதார். இதே படத்தைஅவருடன் வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருந்த அனைவருக்கும் அனுப்பினர்.
ஒட்டுமொத்த குடும்பமும் மானம் போய்விட்டதாக ரம்யாவை திட்டி தீர்த்தனர். கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தவறான முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
பிறகு ரம்யாவுக்கு என்ன ஆனது? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in