பெல்ஜியம் நாட்டின் வானியலாளரும், பிரபஞ்ச ஆராய்ச்சியாளருமான ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் லுமேட்டர் (Georges Henry Joseph Edouard Lemaitre) பிறந்த தினம் இன்று (ஜூலை 17).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# பெல்ஜியம் நாட்டின் சாலர்வ் நகரில் (1894) பிறந்தார். பள்ளிக் கல்வி முடித்ததும், லுவென் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் பயின்றார். முதல் உலகப் போரின்போது (1914) பெல்ஜியம் ராணுவத்தில் பீரங்கிப்படை அதிகாரியாக பணிபுரிவதற்காக படிப்பைப் பாதியில் நிறுத்தினார். பெல்ஜியம் வார் கிராஸ் பதக்கம் பெற்றார்.
# இயற்பியலும், கணிதமும் பயின்றார். மதப் பயிற்சிகள் பெற்று, 1923-ல்பாதிரியாராக நியமிக்கப்பட்டார். அதேஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வானியலில் பட்டம் பெற்றார்.
# இங்கிலாந்து வானியல் நிபுணர் ஆர்தர் எட்டிங்டனுடன் இணைந்து பணியாற்றினார். அவரது வழிகாட்டுதலில் நவீன பிரபஞ்சவியல், விண்மீன்கள், வானியல், எண்கணித பகுப்பாய்வு ஆகிய துறைகளில் பல விஷயங்களை அறிந்துகொண்டார். கேம்பிரிட்ஜில் உள்ள ஹார்வர்டு கல்லூரியில் வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
# மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். பெல்ஜியம் திரும்பி, கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராக சேர்ந்தார்.
# பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற ஹபிள் விதியை (Hubble's law) எட்வின் ஹப்பிள் கூறுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே 1927-ல் இவர் வெளியிட்டார். பிரபஞ்ச விரிவாக்க கோட்பாட்டை முதன்முதலில் வெளியிட்டவர் இவரே.
# ‘காஸ்மிக் எக்' என இவர் கண்டறிந்த கோட்பாடுதான் பின்னாளில், 'பெரு வெடிப்புக் கோட்பாடு' என்ற பெயரில் பிரபலம் அடைந்தது. ஆனால், இவர் அதை கண்டுபிடித்து ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டபோது, பெல்ஜிய வானியலாளர்கள் மத்தியில்கூட அது எடுபடவில்லை.
# கட்டுரையை இவர் 1931-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பிரபஞ்சம் - ஆன்மிகம் இடையே உள்ள தொடர்பை கண்டறியும் பிரிட்டிஷ் அசோசியேஷன் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டார். அங்கு பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்கும் தனது ‘பிரிமிவல் ஆட்டம்', ‘காஸ்மிக் எக்' கோட்பாடுகளை விவரித்தார். மெல்ல ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார்.
# பல நாடுகளிலும் நடைபெற்ற கருத்தரங்குகளில் உரையாற்றினார். பிரபஞ்சவிரிவாக்கம் குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து, விரிவான கட்டுரைகளை 1933-ல் வெளியிட்டார். இவரது கோட்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
# வாடிகன் பான்டிஃபிகல் அறிவியல் அகாடமி உறுப்பினராக 1936-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960-ல் அதன் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், இறுதிவரை அங்கு பணியாற்றினார். பெல்ஜியம் ராயல் அறிவியல், கலை அகாடமி உறுப்பினராக 1941-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘தி பிரிமிவல் ஆட்டம் ஹைப்போதிசிஸ்' என்ற பிரெஞ்ச் மொழி நூலை 1946-ல் வெளியிட்டார். அதே ஆண்டு ஸ்பானிய மொழியிலும், 1950-ல் ஆங்கிலத்திலும் அந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டது.
# முதல் கணினியை தான் பணியாற்றிய பல்கலைக்கழகத்தில் 1958-ல் அறிமுகம்செய்தார். பிரபஞ்சவியல் கணக்கீடுகளுக்கு கணினியைப் பயன்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். இறுதிவரை பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த ஜார்ஜஸ் லுமேட்டர் 72 வயதில் (1966) மறைந்தார்.