தனது வேகத்தாலும் தைரியத் தாலும் உலகைக் கவர்ந்த குத்துச்சண்டை வீரர் முகமதுஅலி. குத்துச்சண்டைக் களத்தில் மின்னல் வேகத்தில் எதிரிகளை வீழ்த்தியவர். நாற்பது வயதில் இருந்து மிகக் கடினமான உடல் போராட்டமாக பார்க்கின்சன் நோயை எதிர்கொண்டார்.
உடல் மெதுவாகப் பலவீனமடைந்தாலும், மன உறுதியை இழக்காமல் உலகம் முழுவதும் அந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். லட்சக்கணக்கான மக்களை மெதுவாகப் பாதித்து வரும் நரம்பியல் நோய்களில் ஒன்று பார்க்கின்சன்.
கைகள் நடுங்குவது வயதானதற் கான சாதாரண அறிகுறி எனப் பலர் நினைத்தால், அதன் பின்னால் உயிரின் இயக்கத்தை மெல்லக் கட்டுப்படுத்தும் பார்க்கின்சன் நோய் மறைந்து கிடக்கலாம். மனிதனின் அன்றாட செயல்களையே சிரமப்படுத்தும் இந்த நோய், இன்று மருத்துவ உலகின் பெரும் சவாலாக மாறியுள்ளது.
டோபமைன் குறைவு
உடலின் இயக்கங்களை ஒழுங்குபடுத்தும் முக்கிய வேதிப்பொருள் டோபமைன். மூளையில் இந்த வேதிப்பொருளைச் சுரக்கும் நரம்பு செல்கள் மெதுவாகக் குறைவதன் காரணமாக ஏற்படும் நரம்பியல் குறைபாடே பார்க்கின்சன் நோய். டோபமைன் குறையத் தொடங்கும்போது, உடல் இயக்கங்கள் மந்தமடையும், தசைகள் இறுக்கமாகும், நடுக்கம் ஏற்படும்.
இந்த நோய் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம்தான் காணப்படும். அரிதாக, 21 வயதுக்குக் குறைவானவர்களிடமும் மரபணுக் காரணங்களால் காணப்படலாம். இந்த வகை நோய், இளம்வயது பார்கின்சனிசம் (juvenile parkinsonism) எனப்படுகிறது.
எனவே வயதைப் பொருட்படுத்தாமல் கைகள் நடுக்கம், நடை மந்தம், தசை இறுக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக நரம்பியல் மருத்துவரை அணுகுவது அவசியம்.
நடுக்கம் மட்டுமா?
பொதுவாக பார்க்கின்சன் நோய் என்றால் கைகள் நடுங்குவதாகவே மக்கள் நினைக்கிறார்கள். பார்க்கின்சன் நோயின் முக்கிய அறிகுறிகள்:
* கைகள் அல்லது விரல்களில் மெதுவான நடுக்கம்
* நடை மந்தமாக மாறுதல்
* எழுந்து நிற்பதில் சிரமம்
* முகத்தில் உணர்ச்சி வெளிப்பாடு குறைதல்
* குரல் மெலிதாக மாறுதல்
* கையெழுத்து சிறிதாக மாறுதல்
* உடல் சமநிலை குறைதல்
* தசை இறுக்கம்
* நினைவாற்றல் இழப்பு, கவனக்குறைவு தொடக்கத்திலேயே கண்டறிந்தால், நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
மறக்கப்பட்ட மருந்து
முன்பு பார்க்கின்சன் நோய்க்குத் தீர்வு இல்லை எனும் அச்சம் நிலவியது. இன்று பல்வேறு சிகிச்சைகள் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன. பயன்பாட்டில் உள்ள சிகிச்சைகள்:
* டோபமைன் அளவை அதிகரிக்கும் மருந்துகள்
* உடற்பயிற்சி சிகிச்சை
* பேச்சு பயிற்சி
* யோகா, தியானம்
* ஆழ்மூளைத் தூண்டுதல் அறுவைசிகிச்சை (Deep Brain Stimulation)
இந்தச் சிகிச்சைகள் நோயை முற்றிலும் குணப்படுத்தாவிட்டாலும், நோயாளி சுயமாக வாழ உதவுகின்றன. மருந்துகளைவிட உடற்பயிற்சியே அதிக பலன் தருகிறது என்கின்றனர் மருத்துவர் கள். நாள்தோறும் நடைப்பயிற்சி, நீச்சல், மெதுவான யோகா, சமநிலை பயிற்சிகள் ஆகியவை உடல் இயக்கங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன. இசை, நடனப் பயிற்சிகளும் பார்க் கின்சன் நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்பம் தரும் நம்பிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பார்க்கின்சன் நோயாளி களுக்கு உதவத் தொடங்கியுள்ளன.
* நடுக்கத்தைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் கடிகாரம்.
* நடை வேகத்தை அளக்கும் சென்சார்கள்.
* மருந்து உட்கொள்ள வேண்டிய நேரத்தை நினைவூட்டும் திறன்பேசிச் செயலிகள்.
* பேசும் திறனை மேம்படுத்தும் டிஜிட்டல் கருவிகள்.
இவை நோயாளிகளின் வாழ்க்கையைச் சற்று எளிதாக்குகின்றன. நீண்டகால நரம்பியல் குறைபாடாக இருப்ப தால், மருத்துவ உதவி மட்டுமல்லாமல் சமூகப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பில் சம உரிமை, கல்வி, அரசு நலத் திட்டங்களில் முன்னுரிமை போன்ற ஆதரவுகளையும் பெற வேண்டிய அவசியம் இந்நோயர்களுக்கு உள்ளது.
இதனால் பார்க்கின்சன் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தைப் பாது காக்கவும், அவர்களுக்குச் சட்டரீதியான உரிமைகள் கிடைக்கவும் மாற்றுத்திறன்களின் பட்டியலில் இது சேர்க்கப்பட்டுள்ளது.
மெதுவாகத் தொடங்கி வாழ்க்கையைப் புரட்டிப் போடும் அமைதியான நரம்பியல் தாக்குதல்தான் பார்க்கின்சன் நோய். அலட்சியம் செய்யாமல், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.
மூளை நரம்பில் ஏற்படும் பாதிப்பினால் இந்நோய் தாக்கக்கூடும் என்பதால் சிறாரைத் தலையில் குட்டுவது, தலையில் அடிப்பதுபோன்ற செயல்களை முற்றிலுமாக தவிர்ப்பது குழந்தை வளர்ப்பில் பாலபாடமாகும்.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com