புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் செயல்படும் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு ஊராட்சி காக்கைக்கோன் தெருவில் அங்கன்வாடி இயங்கி வருகிறது. இம்மையக் கட்டிடத்தின் மேற்கூரை, 2018-ல் வீசிய கஜா புயலில் முற்றிலும் சேதம் அடைந்தது. பின்னர், பாதுகாப்பு கருதி கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அதன் பின்னர், புதிய கட்டிடம்கட்டப்படவில்லை. இதனால், இம்மையத்துக்கு உட்பட்ட காக்கைக்கோன் தெரு, அரங்குள மஞ்சுவயல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நாள்தோறும் மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை மட்டுமே வாங்கிச் சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.
வகுப்பறை வசதி இல்லாததால் கற்பித்தல் உள்ளிட்ட எந்தப் பணியும் நடைபெறுவதில்லை. எனவே, இந்த அங்கவாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் தேவமணி கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் கட்டிடங்கள் மோசமான நிலையிலும், கட்டிடங்கள் இல்லாத நிலையிலும் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு கட்டிடம் இல்லாத இடங்களில் வாடகைக் கட்டிடத்தைப் பிடித்து நடத்தலாம் என அலுவலர்கள் கூறுகின்றனர்.
அரசுக்கு வேண்டுகோள்: ஆனால், பொதுப்பணித் துறையினரின் உறுதிச் சான்றுடன் கழிப்பறை, மின்சாரம் போன்ற வசதியுடன்கூடிய தரமான கட்டிடத்தை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், இதற்கு வாடகையாக மாதத்துக்கு ரூ.1,000 வீதம் மட்டுமே வழங்கப்படும் எனவும்அலுவலர்கள் கூறுகின்றனர்.
வாடகைமிகக் குறைவாக இருப்பதால் யாரும் தங்களது கட்டிடத்தை வாடகைக்கு கொடுக்க மறுக்கின்றனர். எனவே,அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் அரசு விரைந்து புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பட்டத்திக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சின்னப்பாகூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளாக அரசிடம் கட்டிடம் கட்டுமாறு பலமுறை வலியுறுத்தியும் கட்டித் தரப்பபடவில்லை. எனினும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.