ராணிப்பேட்டை: ஆற்காடு நகராட்சி தோப்புக்கானா தெற்கு தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியை மாவட்ட ஆட்சியர் எஸ்.வளர்மதி நேரில் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக வளர்மதி கடந்த வாரம் பொறுப்பேற்றார். இதையடுத்து, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும்அரசு அலுவலகங்கள் மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்து நேரடி களஆய்வு மேற்கொண்டு, குறைகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக தீர்க்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலமாக சிற்றுண்டியை தயார் செய்யும் சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் வளர்மதி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
"இந்த மையத்தில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு மாணவர்களுக்கான உணவு சமைக்கும் பணிகள் தொடங்கி, காலை 7 மணிக்கு வாகனங்கள் மூலமாக பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறப் படுகிறது" என பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, தோப்புக்கானா நகராட்சி அரசு தொடக்க பள்ளிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் வளர்மதி, அங்கு குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு ஆய்வு செய்தார். அவர் சாப்பிட்ட தட்டை, குழந்தைகளுடன் வரிசையில் நின்றுஅவரே சுத்தம் செய்தது அனை வரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஆய்வின் போது ஆற்காடு நகராட்சி மன்றத்தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத்தலைவர் பவளக்கொடி சரணவன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, மாவட்ட
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாசகேகர், வட்டாட்சியர் சுரேஷ், நகராட்சி பொறியாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.