ஆனைமலை அருகே பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மரபு விளையாட்டான உறி அடித்தல் போட்டியில் உற்சாகத்தோடு பங்கேற்ற மாணவி. படம்: எஸ்.கோபு 
நம்ம ஊரு நடப்பு

பொள்ளாச்சி | நொண்டி அடித்தல், உறி அடித்தல் மரபு விளையாட்டுகளை மீட்டெடுக்கும் அரசு பள்ளி

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: மாணவர்களின் உடல் திறனை வலுப்படுத்தும் நோக்கில் ஆனைமலை அருகேயுள்ள அரசு பள்ளியில் ஆண்டுதோறும் மரபு விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது.

நாகரிக வளர்ச்சியாலும், கால மாற்றத்தாலும் மறந்துபோன மரபு விளையாட்டுகளை மீண்டும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஆனைமலை அருகே பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ‘திறம்படக் கேள்’ என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் மரபு விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்து நண்பர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கிறது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர் களின் கூட்டு முயற்சியால் இந்தவிளையாட்டுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றன. பொங்கல் வைத்து வழிபாடு செய்தபின்னர், பறை இசை, ஒயிலாட்டம், காவடி ஆட்டம், கரகாட்டம், கும்மியாட் டம், வள்ளி கும்மி ஆகியவற்றுடன் இவ்விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், நுங்கு வண்டி ஓட்டுதல், பம்பரம், கண்ணாமூச்சி, பன்னாங்கல், தாயம், ஓட்டங்கரம், குலைகுலையா முந்திரிக்கா, நொண்டி அடித்தல், உறி அடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

இதுகுறித்து பள்ளியின் தமிழாசிரியர் பாலமுருகன் கூறியதாவது: கடந்த காலங்களில் பள்ளி முடிந்து மாலை நேரங்களில் மாணவர்கள் ஓடியாடி விளையாடியதால், உடல் உழைப்பு இருந்தது. அதனால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. கணினி வளர்ச்சி, செல்போன் பயன்பாடு ஆகியவற்றால் குழந்தைகள் நான்கு சுவருக்குள் முடங்கிவிட்டனர். உடல் உழைப்பு குறைந்ததால் அவர்களுக்கு ஆரோக்கியமும் குறைந்துவிட்டது.

இதனால், மரபு விளையாட்டுகளை மாணவ, மாணவிகள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன்மூலம் மாணவர்களிடம் தன்னம்பிக்கை, குழுவாகச் செயல்படுதல், விடாமுயற்சி, மனவலிமை, கற்பனைத் திறன், சிந்திக்கும் ஆற்றல், ஞாபக சக்தி, கூர்நோக்கும் திறன் அதிகரிக்கும். மேலும் இவ்வகை போட்டிகளால், ஆசிரியர், மாணவர்கள் இடையே புரிதல் ஏற்பட்டு, இருவருக்கும் இடையிலான இடைவெளி குறைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT