கோவையில் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்டம் குறித்த மண்டல அளவிலான கருத்தரங்கில் தமிழக முதல்வரின் முதன்மைச் செயலர் டி.உதயசந்திரன் உரையாற்றினார். 
நம்ம ஊரு நடப்பு

தமிழக மாணவர்கள் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர ‘நான் முதல்வன்’ திட்டம் உதவும்: முதல்வரின் முதன்மைச் செயலர் உதயசந்திரன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

கோவை: புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங் களில் தமிழக மாணவர்கள் சேர ‘நான் முதல்வன்’ திட்டம் உதவும் என்று கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழக முதல்வரின் முதன்மைச் செயலர் டி.உதயசந்திரன் கூறினார்.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட ‘நான் முதல்வன்’ திட்டம் குறித்த மண்டல அளவிலான கருத்தரங்கு, கோவை பீளமேட்டில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை நடந்தது. இதில், தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அரசு முதன்மைச் செயலரும், முதல்வரின் முதன்மைச் செயலருமான டி.உதயசந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:

தமிழக முதல்வர், இளைஞர்களை படிப்பில் மட்டுமல்லாது அனைத்து நிலைகளிலும் வெற்றியாளர்களாக திகழச் செய்யும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்ற தனது கனவு திட்டத்தை தொடங்கியுள்ளார். இளைஞர்களின் கல்வி, சிந்தனை, மொழி ஆற்றல், பன்முகத் திறனை மேம்படச் செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அரசு, அரசுஉதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பது இதன் சிறப்பு அம்சம்.

அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும். தமிழில் தனித்திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளாக பேசுவதற்கும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.

நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் சேர்க்கைக்கு நான் முதல்வன் திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு பேராசிரியர்கள் மென்மேலும் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு உதயசந்திரன் பேசினார்.

கூட்டத்தில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.கார்த்தி கேயன், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.காளிராஜ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசன்ட் திவ்யா, இயக்குநர் எம்.பி.விஜயகுமார், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT