கோவை கெம்பட்டி காலனி மாநகராட்சிப் பள்ளிக்கு வந்த நடமாடும் நூலகத்தில் எடுத்த புத்தகங்களுடன் மாணவ, மாணவிகள். 
நம்ம ஊரு நடப்பு

கோவையில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் நூலகம்

செய்திப்பிரிவு

கோவை: வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் பயன்பாட் டுக்காக, நடமாடும் நூலகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ‘உங்களைத் தேடி நூலகம்’ என்ற தலைப்பில் நடமாடும் நூலகம் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.

இந்த நடமாடும் நூலகம் மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டுமின்றி, மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரேஸ் கோர்ஸ், வஉசி பூங்கா, வாலாங்குளம், உக்கடம், கொடிசியா வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும் செல்கிறது.

இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் நடமாடும் நூலகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் கதை, கவிதை புத்தகங்கள், மாணவர்களுக்கு தேவையான அறிவியல் புத்தகங்கள் இருக்கும்.

தினசரி ஒரு மாநகராட்சி பள்ளிக்கும் மற்றும் மக்கள் கூடும்இடத்துக்கும் நூலக வாகனம் கொண்டு செல்லப்படும். மாணவர்களும், பொதுமக்களும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். சுமார் 2 மணி நேரம் ஒரே இடத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்படும்.

தங்களுக்குப் பிடித்தமான நூல்களைஎடுத்துபடித்துவிட்டு, திரும்ப கொடுத்துவிட வேண்டும். கோவையில் ரேஸ்கோர்ஸ், கொடிசியா மைதானம், உக்கடம் பெரியகுளம் உள்ளிட்ட இடங்களுக்கு நூலக வாகனம் செல்லும். மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இந்த நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT