கிருஷ்ணகிரி: கட்டிகானப்பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற ஊராட்சி நிர்வாகம் 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த இடத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அரை ஏக்கர் பரப்பில் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
தொடக்கப் பள்ளியில் 450 மாணவ, மாணவிகளும், உயர்நிலைப் பள்ளியில் 860 மாணவ, மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனர். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதானம், ஆடிட்டோரியம் கட்டுவதற்கு போதிய இட வசதியில்லை.
உயர்நிலைப் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றி அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோரும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மங்கை நகர் அரசு குடியிருப்புக்கு பின்புறம் காலியாக உள்ள 2 ஏக்கர் நிலத்தை ஊராட்சி நிர்வாகம் ஒதுக்கியது.
அந்த இடத்தை செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆய்வு செய்தனர். அப்போது, முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், ஊராட்சித் தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ், துணை தலைவர் செல்வி பாஸ்கர், செயலாளர் மூர்த்தி, தலைமை ஆசிரியர்கள் திம்மராஜ், சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.