கோவை: 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்லடம் அருகே பள்ளி மாணவ, மாணவிகள் 7,500 பனை விதைகளை நட்டனர்.
நம் நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு திருப்பூர் பல்லடம் அருகேயுள்ள பணிக்கம்பட்டியில், 7500 பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வனம் இந்தியா பவுண்டேசன், பணிக்கம்பட்டி ஊராட்சி மன்றம், ஜெயந்தி மெட்ரிக் பள்ளி, ஆதர்ஷ் மெட்ரிக்பள்ளி, பணிக்கம்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி ராமு கல்லூரி ஆகியவை இணைந்து, பணிக்கம்பட்டி கோட்டை மாரியம்மன் - விநாயகர்கோயிலுக்கு சொந்தமான 9 ஏக்கரில் பனை விதைகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ரோஜாமணி ஈஸ்வரன் தலைமை வகித்தார். வனம் இந்தியா அறக்கட்டளையின் தலைவர் ஸ்வாதி சின்னசாமி, செயலாளர் ‘ஸ்கை’ சுந்தர்ராஜ் மற் றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். அங்கு தோண்டப்பட்ட குழிகளில் பனை விதைகளை விதைக்கும் பணியில் 750 மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். மொத்தம் 7,500 விதைகள் நடப்பட்டன.
இதுதொடர்பாக பள்ளி மாணவர்கள் கூறியதாவது: பழம்பெருமை மிக்க தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான தாவரங்களில் ஒன்று பனைமரம். தமிழர்களின் இயற்கை அடையாளங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் பனைமரத்தைத் ‘தமிழர்களின் தாவரம்’ என்றே அழைக்கலாம்.
ஏனென்றால், இது தமிழ்நாட்டின் மாநில மரம். பனை, புல் இனத்தைச் சேர்ந்த [Palmyra palm] ஒரு தாவரப் பேரினம். பனைமரத்தின் பயன்பாடுகளை விளக்கும் வகையிலேயே அது ‘கற்பகத்தரு’ என்று அழைக்கப்படுகிறது. வேர் முதல் உச்சிவரை பனையின் ஒவ்வொரு உறுப்பும் மனித குலத்துக்குப் பயன்படும் பொருட்கள்தான்.
காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் எழுத பயன்படும் பொருளாக பனை ஓலைகளே பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன. ஓலைகளில் எழுதும் முறை இல்லையெனில், இன்றைக்கு நம் தமிழ் இலக்கண, இலக்கியப் புதையல்கள் நமக்கு கிடைத்திருக்காது. நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி, இத்தகைய பெருமைமிக்க மரத்தின் விதைகளை விதைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.