நம்ம ஊரு நடப்பு

கொல்லிமலையில் உலக பழங்குடியினர் தின விழா: பார்வையாளர்களை கவர்ந்த பழங்குடியின மாணவிகள் நடனம்

செய்திப்பிரிவு

நாமக்கல்: கொல்லிமலையில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தின விழாவில் பழங்குடியின மாணவிகள் கண்கவர் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உலக பழங்குடியினர் தின விழா கொல்லிமலை செங்கரை அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு சிறப்பு கவனம் எடுத்து திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்துறைக்கு ரூ. 4,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 7 லட்சம் பழங்குடியின மக்கள் உள்ளனர். பழங்குடியினர் அதிகமுள்ள மாவட்டங்களில் நலத்திட்டங்கள் விரைந்து சென்றடைய பழங்குடியினர் நலத்திற்காக தனியாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 1,338 ஆதிதிராவிடர்நலப் பள்ளிகள், 320 பழங்குடியின நலப் பள்ளிகள், 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 1,374 விடுதிகள் இத்துறை மூலம் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் உயர் கல்வி பெறவேண்டும். அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி இனங்களை பாதுகாக்க அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசினார்.

அமைச்சரும் நடனமாடினார்

முன்னதாக 250 பேருக்கு ரூ.2.38கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, உலக பழங்குடியினர் தினத்தையொட்டி நீலகிரி, தேனி, திருவள்ளூர் மற்றும் கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடியினர் மற்றும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அப்போது நீலகிரி தோடர் பழங்குடியின பெண்களுடன் இணைந்து அமைச்சர் கயல்விழியும் நடனமாடினார். விழாவில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, பழங்குடியினர் நல இயக்குநர் எஸ்.அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT