அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் புனித மரியாள் தொடக்கப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பள்ளியில் ரூ.3.60 லட்சம் செலவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, வண்ணம் பூசி அசத்தியுள்ளனர்.
ஆண்டிமடத்தை அடுத்த வரதராஜன்பேட்டை பேரூராட்சியில், 100 ஆண்டுகள் பழமையான புனித மரியாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் 200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு வண்ணம் பூசி பல ஆண்டுகள் ஆனதால், சுவர்கள் மங்கலாக காட்சியளித்தன.
தாங்கள் படித்த பள்ளியின் பரிதாப நிலையைக் கண்ட முன்னாள் மாணவர்கள் சிலர், தங்கள் சொந்த செலவில் பள்ளியில் உள்ள சிறிய சேதங்களைச் சீரமைத்து, வண்ணம் பூச முடிவு செய்தனர். இதன்படி, பள்ளியின் முன்னாள் மாணவர்களிடம் ரூ.3.6 லட்சம் வசூலித்து, பள்ளிக் கட்டிடங்களில் ஏற்பட்டிருந்த சிறிய சேதங்களை சீரமைத்து, வண்ணம் பூசியுள்ளனர்.
இதனால், இப்பள்ளி தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. முன்னாள் மாணவர்களின் இந்த நற்செயலை, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வெகுவாகப் பாராட்டினர்.
இதுகுறித்து, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அருள் பிரான்சிஸ் சேவியர், இதயவேந்தன், குமார், ஜோசப்ராஜ் ஆகியோர் கூறும்போது, "வெளியிடங்களில் பணியாற்றி வரும் நாங்கள், கரோனா காலத்தில் ஊருக்கு வந்தபோது பள்ளியைப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தோம், பள்ளியின் சுவர்கள் மங்கலாக காட்சியளித்ததுடன், ஆங்காங்கே கட்டிடங்களில் சேதங்களைக் கண்டு வேதனை அடைந்தோம்.
முன்னாள் மாணவர்கள் பலரையும் தொடர்பு கொண்டு, பள்ளியைச் சீரமைப்பது குறித்து பேசினோம். அதைத் தொடர்ந்து, ரூ.3.6 லட்சம் திரட்டி அதில் சேதங்களைச் சீரமைத்து, வண்ணம் பூசியுள்ளோம். வருங்காலத்தில் பள்ளிக்குத் தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்யவும் முடிவு செய்துள்ளோம்" என்றனர்.