திருச்சிசெஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுக் காக, ஸ்ரீரங்கம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கருப்பு, வெள்ளை உடைகளை அணிந்து தங்களையே செஸ் காய்களாக நிறுத்தி விளையாடினர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை விளம்பரப்படுத்தும் நோக்கில் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஸ்ரீரங்கம் தேவி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை அன்று மைதானத்தில் வரையப்பட்டிருந்த செஸ் போர்டு தளத்தில், மாணவ, மாணவிகள் கருப்பு, வெள்ளை உடைகளை அணிந்து கொண்டு, தங்களையே செஸ் காய்களாக நிறுத்தி விளையாடினர். இப்போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அந்தநல்லூர் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஓய்வு பெற்ற முதல்வர் எஸ்.சிவக்குமார் மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதேபோல, ரங்கம் சித்திரை வீதியில் உள்ள டாக்டர் ராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீரங்கநாதா நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் மாணவர்கள் பங்கேற்ற செஸ் போட்டிகளையும் ஆட்சியர் பிரதீப் குமார் பார்வையிட்டார்.