உதகை: முதுமலை ஊராட்சி கூவக்கொல்லிஅரசு தொடக்கப் பள்ளிக்குச் செல்லமுறையான சாலை வசதி இல்லாததால் ஊராட்சி அலுவலகக் கட்டிட வளாகத்தில் அப்பள்ளியின் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டம், முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பழங்குடி கிராமங்கள் உள்ளன. பல கிராமங்களில் பழங்குடி மக்கள்அடிப்படை வசதிகளின்றி தவித்துவருகின்றனர். அவர்கள் மத்தியஅரசு திட்டத்தின் கீழ் வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால், பல இடங் களில் பெரிய அளவிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
இந்நிலையில், கூவக்கொல்லிப் பகுதியில் செயல்பட்டுவரும் ஊராட்சிஅரசு தொடக்கப் பள்ளிக்குச் செல்ல முறையான சாலை வசதிஇல்லாத காரணத்தால் ஊராட்சிஅலுவலகக் கட்டிட வளாகத்தில் வகுப்புகள் நடத்தும் பரிதாபநிலை ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து முதுகுளி மக்கள் கூறும்போது, ‘இந்தப் பகுதியில் பல கிராமங்களுக்குச் சாலை வசதியே கிடையாது. மண் பாதை மட்டுமே இருக்கிறது. மழைக்காலங்களில் இந்த மண் பாதைகளில் நடக்கவே முடியாது. இதனால், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. அருகிலிருக்கும் ஊராட்சி அலுவலக கட்டிட வாசலில் அமர்ந்து படிக்கிறார்கள்’ என்றனர்.
இந்த விவகாரம் குறித்து கூடலூர் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இந்தப் பள்ளியில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும்’ என்று தெரிவித்தனர்.