நாகப்பட்டினம்: நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் தினமும் மதிய உணவு சாப்பிட்ட பிறகு மாணவர்கள் சிறிது நேரம் செய்தித்தாள் மற்றும் வார இதழ்கள் வாசிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி ஆகியோர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்கியிருந்தனர்.
இதன்மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறனும், பொது அறிவும் மேம்படும்என்றும் இதுதொடர்பாக அனுப்பிய சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டி யிருந்தனர்.
அந்த அறிவுரையின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டம் நாகை ஒன்றியம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் நாளிதழ் வாசிப்பதற்காக ஆசிரியர் பாலசண்முகம் தனது சொந்த செலவில், ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ 100 பிரதிகளை வழங் கினார்.
மாணவ- மாணவிகள் மதிய உணவு இடைவேளையின்போது ‘வெற்றிக்கொடி’ நாளிதழை ஆர்வத் துடன் வாசித்து மகிழ்ந்தனர்.