தேனி: போடிநாயக்கனூர் பள்ளியில் மாணவர்கள் வருகைப்பதிவின்போது தங்கள் தந்தை பெயரையும் சேர்த்தே சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்க னூரில் இயங்கி வருகிறது பிச்சாண்டி நடுநிலைப்பள்ளி. அரசு நிதியுதவி பெறும் இப்பள்ளியில் 105 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
நடப்பு கல்வி ஆண்டு முதல் இப்பள்ளி மாணவர்கள் வருகைப்பதிவின்போது தங்கள் பெயரோடு தந்தையின் பெயரையும் சேர்த்தும் சொல்லும் ஒரு பழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய்க்குமார் ராஜா கூறியதாவது:
இக்கல்வி ஆண்டு முதல் எங்கள் பள்ளியில் படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களும் காலை மற்றும் பிற்பகலில் வருகையை வகுப்பு ஆசிரியர்களிடம் பதிவு செய்யும் போது தங்கள் பெயருடன் தந்தை பெயரையும் சேர்த்து சொல்லும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். தந்தை பெயரை சொல்லும் போது மாணவர்களுக்கு தந்தை மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும் என்று எங்கள் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மாணவர்கள் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகளிலும் தங்கள் பெயருடன் தந்தை பெயரையும் சேர்த்து எழுதி உள்ளனர். சாதாரண மாக, எப்போதாவது தந்தை பெயரைசொல்லும் மாணவர்கள் அனைத்து நாட்களிலும் தந்தை பெயரை உச்சரிக் கும்போது தந்தை மீதான எண்ணமும், மரியாதையும் அதிகரிக்கும்.
மேலும் எங்கள் பள்ளியில் சிறுவயதில் இருந்தே மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் நோக்கில் இந்த கல்வி ஆண்டில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் தலைவர் மற்றும் தலைவியை தேர்ந்தெடுத்துள்ளோம்.
வகுப்பறை சுத்தம் கண்காணித்தல், மாணவர்கள் காலணிகள் சரியாக கழற்றி வைப்பதை சரிபார்ப்பது, ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் மாணவர்களை அமைதியுடன் இருக்கவைப்பது போன்றவை மாணவர் தலைவரின் முக்கியமான பணிகள்.
இதன்மூலம் தலைவராக செயல்படுவது, தன்னம்பிக்கை, வெற்றி தோல் வியை சமமாக கருதும் மனப்பான்மை வளர்தல், பிறர் உணர்வுகளை மதித்தல், பொறுமை, கோபத்தை கட்டுப்படுத்தல், பேச்சாற்றல், நேரம்தவறாமை போன்ற தலைமைத்துவத் துக்கான தகுதிகளை மாணவர்கள் பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.