திருச்சி: ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற் பத்தியை அதிகரிக்க திருச்சியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இலவச யோகா பயிற்சி முகாம், அரசு சையது முர்துசா அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சா.காமராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியை மெர்சி கிரேசி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், ரத்தத்தில் ஹீமோ குளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் கருவேப்பிலைப் பொடி, முருங்கைப் பொடி, நெல்லிக்காய் பொடி, தேன் அடங்கிய மருந்துப் பெட்டகங்கள் 250 மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
சித்த மருத்துவர் சா.காமராஜ் பேசும்போது, “மாறிவரும் உணவுப் பழக்கங்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய்கள் அதிகரிக்கின்றன.
மாணவர் கள் பாரம்பரிய உணவு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். சிறு தானியங்கள், கீரை, பழ வகைகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்த்து வீட்டில்சமைத்த உணவுகளையே உட்கொள்ளவேண்டும்" என்று கேட்டுக்கொண் டார். தொடர்ந்து மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.