திருவாரூர்: 20-வது வாய்ப்பாடு வரை ஒப்பித்த 5-ம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியர் இடத்தில் அமர வைத்து ஆசிரியர்கள் கவுரவித்தனர்.
திருவாரூர் துர்காலயா சாலையில் அமைந்துள்ளது மெய்பொருள் அரசு உதவிபெறும் பள்ளி. இப்பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி ஜூலை 1-ம் தேதி அன்று நடந்த காலை வழிபாட்டுக் கூட்டத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது, விடுமுறை நாளான சனி, ஞாயிறு 2 நாட்களில், ஒன்றிலிருந்து 20-வது வாய்ப்பாடு வரை படித்துமனப்பாடம் செய்து ஜூலை 4 அன்று ஒப்பிக்கும் மாணவ, மாணவிகள் தனது தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவர் என்று கூறினார்.
"அவ்வாறு படித்து யார் எனது இருக்கையில் அமர விரும்புகிறீர்கள்" என்று அவர் கேட்டபோது, ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவ, மாணவிகளும் தங்கள் கையை உயர்த்தி காண்பித்தனர்.
இந்நிலையில், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி சபிதா உறுதியளித்தவாறே 1 முதல்20-வயது வரையிலான வாய்ப்பாட்டை சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் படித்துமனப்பாடம் செய்து அனைவரின் முன்னிலையிலும் ஒப்பித்தார். திருவாரூர் மாவட்டம் பருத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவரான சதீஷ், பானுமதி தம்பதியரின் மகள் அவர்.
சபிதாவை பாராட்டிய தலைமைஆசிரியை சுமதி, வகுப்பு ஆசிரியை ராதிகாமற்றும் ஆசிரியர்கள் முன்பு அறிவிக்கப்பட்டபடி, சபிதாவை தலைமையாசிரியர் இருக்கையில் அமர வைத்து கிரீடம் அணிவித்துபாராட்டினர். சக வகுப்பு மாணவ, மாணவிகளின் கைத்தட்டலோடு தலைமையாசிரியையின் இருக்கையில் கம்பீரமாக அமர்ந்த சபிதாவின் கண்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தன.
இந்த காட்சியை தலைமை ஆசிரியை சுமதி வீடியோ எடுத்து மற்ற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் இருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஆனந்தக் கண்ணீர்
தற்பொழுது, இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜெய்பீம் படத்தில் வருவது போன்று மாணவி சபிதா தலைமையாசிரியை இருக்கைக்கு அருகில் தயக்கத்தோடு வந்து, பின்பு கம்பீரமாக கிரீடத்துடன் அமரும் காட்சி மாணவ, மாணவிகளுக்கு மட்டுமின்றி இந்தகாட்சியை பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் ஆனந்த கண்ணீரை வரவழைக்கும்.