உடுமலை: புத்தக வாசிப்பை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என, உடுமலையில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்கேஆர் கல்விக் குழுமங்களின் சார்பில் தேசிய மருத்துவர் தினம்மற்றும் கற்றலில் ஆர்வம் அதிகரிப்பது தொடர்பான கருத்தரங்கம் ஆர்கேஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கல்விக் குழுமங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் டி.மாலா வரவேற்றார்.
ஆர்கேஆர் கல்வியியல் கல்லூரிதமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியம், பூலாங்கிணர் அரசுமேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியர் சரவணன் ஆகியோர் கூறும்போது, “கரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்பின்போது அதிக அளவில் மாணவர்கள் கைப்பேசியை பயன்படுத்த தொடங்கினர்.
இதன் மூலம் கைப்பேசியில் மாணவர்கள் அதிக நேரம் செலவிட்டு, கதைகளையும், படங்களையும் விதவிதமான வீடியோக்கள், புதிய செயலிகளையும் பதிவிறக்கம் செய்துபார்க்கும் நிலை ஏற்பட்டது. புத்தகங்களை படிக்கும் பழக்கம் குறைந்ததால் கண்களுக்குப் பாதிப்பு, மனஅழுத்தம், மனச்சோர்வு, பசியின்மை, தூக்கமின்மை, நரம்புகள் தொடர்பான இடர்பாடுகள், மற்ற குழந்தைகளுடன் தொடர்பின்மை ஆகிய நெருக்கடிகள் ஏற்பட்டன.
தற்போது, கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், புத்தக வாசிப்பை தொடர் முயற்சியின் மூலம் நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றனர்.
இந்த கருத்தரங்கில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மழலையர் வகுப்பில் பயிலும்குழந்தைகள் மருத்துவர் போல வேடமணிந்து வருகை தந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
உயர்நிலை, மேல்நிலை பள்ளிமாணவர்கள் மருத்துவர்களை சந்தித்து அவர்களுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.