அரியலூர் மாவட்டம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக நெகிழி ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன. 
நம்ம ஊரு நடப்பு

அரியலூர் | உலக நெகிழி ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவிகளுக்கு துணிப்பைகள்

செய்திப்பிரிவு

அரியலூர்: உலக நெகிழி ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி அரசுபள்ளி மாணவிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்டம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான உலக நெகிழி ஒழிப்புதின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரியலூர் மாவட்ட துணிப்பை இயக்கஒருங்கிணைப்பாளர் தமிழ்க்களம் இளவரசன் பேசும்போது, "நெகிழியை அதிகம் பயன்படுத்துவதால் பூமியில்உள்ள வன விலங்குகள், கால்நடைகள். கடல்வாழ் உயிரினங்கள், மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் பேரழிவை சந்திக்கின்றன.

நெகிழியை எரிப்பதால் டையாக் ஸின் உருவாகிறது. இதுநுரையீரல் புற்றுநோய்க்கு முதன்மையான காரணம் ஆகும்.. இதை உணர்ந்ததால்தான், நம் முன்னோர்கள் மஞ்சள் நிற துணிப்பைகளை பயன்படுத்தினர். இந்த பூமியை பாதுகாக்க வேண்டுமென்றால் நாமும் துணிப்பையை பயன்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மாள் ராஜதுரை, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுத் தலைவர் மனோகரன், ஊராட்சி செயலர் பாண்டியன், சமூகஆர்வலர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோர் போட்டிகளை நடத்தினர். முன்னதாக, ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். நிறைவாக, ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்

SCROLL FOR NEXT