உதகை: நீலகிரி மாவட்டத்தில் மூடப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி ஊர் மக்களின் முயற்சியால் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டம், குந்தா தாலுகாபாலகொலா ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 1957-ம் ஆண்டு முதல் இந்தப்பகுதி மக்களின் கல்வித் தேவையை கோக்கலாடா அரசு மேல்நிலைப்பள்ளி பூர்த்தி செய்து வந்தது. 6 முதல் 12-ம்வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட பெங்கால் மட்டம், மைனலை மட்டம், தேனாடு, கோக்கலாடா, மாசிகண்டி, கோத்திபென், மேரிலேண்ட், சாம்ராஜ், கேரிக்கண்டி உள்ளிட்ட 10 கிராமங்களில் அரசியல், சமூக, பொருளாதார, கலை, கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளின் மேம்பாட்டுக்கு வழிவகுத்த கல்விக் கூடமாக இப்பள்ளி திகழ்ந்தது.
நாளடைவில், தனியார் பள்ளி மோகம் காரணமாக, மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. வெறும் 6 மாணவர்களே பள்ளிக்கு வந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மூடப்பட்டது. இதனால், பள்ளி வளாகம் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடந்தது. கல்விக் கூடத்தை மதுக்கூடமாக மாற்றி இருந்தனர்.
பாரம்பரியமிக்க பள்ளி சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியதைகண்டு வேதனையடைந்த அப்பகுதி மக்கள், பள்ளியை புனரமைத்து மீண்டும் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இப்பணியை ஒருங்கிணைத்த பாலகொலா ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி தேவபெட்டன் கூறும்போது, “பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பள்ளியை மீண்டும் திறக்கதொடர்ந்து கோரிக்கை வைத்தோம். மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தினால் பள்ளியை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.
அதைத்தொடர்ந்து, வீடு வீடாக சென்று பள்ளியின் நிலைமையை எடுத்து கூறி, தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க பிரச்சாரம் மேற்கொண்டோம். இதன்பலனாக, கணிசமான மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். இதனையடுத்து பள்ளியை சீரமைத்து தொடங்கி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
எனது சொந்த நிதி மற்றும் முன்னாள் மாணவர்களின் நிதி உதவியுடன், பாழடைந்த நிலையில் இருந்த பள்ளிகட்டிடம் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் பள்ளிக்கு திறப்பு விழா நடத்தப்பட்டது. தற்போது, இந்த பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 9 ஆசிரியர்கள் உள்ளனர்” என்றார்.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையிலும் ஊர் மக்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.