இளம் விஞ்ஞானி திட்டத்தின்கீழ் விண்வெளி ஆய்வுப் பயிற்சி பெற பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் திங்கள்கிழமைக்குள் (இன்று) விண்ணப்பிக்க வேண்டும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 'யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த ஆண்டுஅறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின்கீழ் மாணவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட முடியும். மேலும் அவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
நடப்பாண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி இஸ்ரோவின் 4 மையங்களிலும் மே 11 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு பிப்.3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்படி, விருப்பமுள்ள மாணவர்கள் பிப்.24-ம்தேதிக்குள் (இன்று) www.isro.gov.in http://www.isro.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 080 2217 2269 தொலைபேசி எண் அல்லது yuvika2020@isro.gov.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.