மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகள் தயாரித்த கலைநயமிக்க பொருட்கள் கண்காட்சி மதுரை மடீட்சியா அரங்கில் நடந்தது. இக்கண்காட்சியை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பார்த்தசாரதி. மதுரை மாநகராட்சி ஆணையர் எஸ்.விசாகன் ஆகியோர் பார்வையிட்டனர். 
நம்ம ஊரு நடப்பு

தேவையற்ற பொருட்களில் இருந்து விதவிதமான கலைநயமிக்க பொருட்கள் தயாரிப்பு: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அசத்தல்

செய்திப்பிரிவு

வேண்டாம் என்று தூக்கி வீசப்பட்ட பொருட்களைக் கொண்டு மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் கலைநயமிக்க பொருட்களை தயாரித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் மட்டுமின்றி, தனித் திறமைகளையும், சிந்தனைத் திறன்களையும் ஊக்குவிக்கும் வகையில் தன்னார்வ நிறுவனங்களுடன் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து சிறப்புப் பயிற்சிகள் வழங்கி வருகிறது.

அந்த வகையில், தேவையற்ற பொருட்களில் இருந்து மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் வியக்கும் வகையில் கலைநயமிக்கப் பொருட்களை தயாரித்து அசத்தியுள்ளனர். அதைக் காட்சிப்படுத்தும் வகையில் ‘தேவையற்ற பொருட்களில் தயாரிக்கப்பட்ட கலைக்கண்காட்சி’ மதுரை மடீட்சியா அரங்கில் நடந்தது.

மாநகராட்சி, எச்சிஎல். நிறுவனம்,எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து இக்கண்காட்சியை நடத்தின. ‘ஹேப்பி ஸ்கூலிங்’ திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் மாணவ, மாணவிகள் தேவையற்ற பொருட்களில் தயாரித்த பொருட்கள், பார்வையாளர்களை ஈர்த்தது. இதில்,சிறந்த பொருட்களை தேர்வு செய்துவெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன் பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கே.பார்த்தசாரதி பேசும்போது, "மாணவர்கள் தற்போது கெட்டுப்போவதற்கு முக்கிய காரணம் செல்போன். இதனால், மாணவர்கள் மத்தியில் நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதே செல்போனை உபயோகமான முறையில் பயன்படுத்தலாம்.

ஒரு ஆசிரியர் கற்றுக் கொடுக்கமுடியாத விஷயத்தை செல்போனில் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் இதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

மாணவர்களுடைய சிந்தனைத் திறன் தற்போது வியக்கத்தக்க வகையில் உள்ளது. மாணவர்கள் தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது. தோல்வியை அடைந்தால் மட்டுமே வெற்றிப்படிகளை நோக்கிச் செல்ல முடியும்" என்றார்.

நிகழ்ச்சியில் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளையின் தலைவர் சி.ராமசுப்பிரமணியன், எச்சிஎல். நிறுவன ஒருங்கிணைப்பு மேலாளர் சாமுவேல் எபினேசர், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்வமணி, ஆராய்ச்சி இயக்குநர் எம்.கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT