நம்ம ஊரு நடப்பு

இந்து தமிழ் திசை, எல்ஐசி, இந்தியா ரஷ்ய தொழில் வர்த்தக சபை இணைந்து நடத்திய மதுரை மண்டல அளவிலான விநாடி-வினா போட்டியில் நெல்லை பள்ளி முதலிடம்: மாநில போட்டியில் வென்றால் ரஷ்ய விண்வெளி மையம் செல்லலாம்

செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை' நாளிதழ், எல்ஐசி. இந்திய-ரஷ்ய தொழில் வர்த்தக சபை ஆகியவை இணைந்து நடத்திய மண்டல அளவிலான விநாடி-வினா போட்டியில் நெல்லை பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

‘இந்து தமிழ் திசை’, எல்ஐசி, இந்திய-ரஷ்ய தொழில் வர்த்தக சபை ஆகியவை இணைந்து மண்டல அளவிலான அறிவியல் விநாடி- வினாஎன்ற அறிவுத் திருவிழா போட்டியை மதுரை வடக்குவெளி வீதியில் உள்ளசேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடத்தின. இந்நிகழ்ச்சி சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மற்றும் ட்ராவல்பார்ட்னராக AMW VACAY கம்பெனிஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உட்பட 54 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) விஞ்ஞானி டில்லிபாபு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அறிவை எவ்வாறு மேம்படுத்துவது? என்பதை குட்டி அறிவியல் கதைகள் மூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.

நுட்பமான அறிவியல் வினாக்கள்

விநாடி-வினா போட்டியில் மாணவ, மாணவிகள் தலா 3 பேர் கொண்ட தனித்தனி குழுவாகப் பிரித்து அவர்களுக்கு 25 கேள்விகளைக் கொண்ட சிறு தேர்வு நடத்தப்பட்டது. அதில், அறிவியல், வின்வெளி சம்பந்தமான 25 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. சரியான விடை எழுதிய முதல் 6 அணிகளுக்கு இடையே விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியை X QUIZ IT குயிஸ் மாஸ்டர் அரவிந்த் நடத்தினார். இப்போட்டியில் மாணவர்களின் அறிவியல் அறிவை பரிசோதிக்கவும், வளர்க்கவும் நுட்பமான அறிவியல் வினாக்கள் கேட்கப்பட்டன.

இதில், திருநெல்வேலி புஷ்ப லதா வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த வி.முகேஷ்குமார் (6-ம் வகுப்பு), ஏ.முகமது இப்ராகிம் (7-ம் வகுப்பு), கார்த்திக் கணேஷ் (8-ம் வகுப்பு) ஆகியோர்அடங்கிய அணி முதல் இடம் பிடித்தது. கன்னியாகுமரி பிஷப் ரெமிஜியஸ் பள்ளி மாணவர் ரமண கைலாஷ் (8-ம் வகுப்பு), வேத வர்ஷன் (7-ம் வகுப்பு), விக்னேஷ் (6-ம் வகுப்பு) ஆகியோர் கொண்ட அணி இரண்டாவது இடம் பிடித்தது.

மதுரை எஸ்பிஓஏ பள்ளி மாணவர்ஹர்ஷித் அரவிந்த் (8-ம் வகுப்பு), முத்துராமலிங்கம் (7-ம் வகுப்பு), அகமத்(6-ம் வகுப்பு ஆகியோர் கொண்ட அணி மூன்றாம் இடம் பிடித்தது. விநாடி-வினா போட்டியில் பங்கேற்ற 6 அணி மாணவர்களுக்கும் பதக்கமும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

பரிசுகளை இந்திய-ரஷ்ய தொழில் வர்த்தக சபை ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் பகத்ஷிங், எல்.ஐ.சி. வணிக மேலாளர் வி.நாராயணன், ‘இந்து தமிழ் திசை’ பொதுமேலாளர் டி.ராஜ்குமார் ஆகியோர் வழங்கினர்.

மண்டல அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற இந்த அணிகள் சென்னையில் நடக்கும் மாநிலஅளவிலான விநாடி-வினா இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள். அதில் வெற்றிபெறுவோர் ரஷ்ய விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

கேள்விகளைக் கண்டு மிரளக் கூடாது

இந்நிகழ்ச்சியில் இந்திய-ரஷ்ய தொழில் வர்த்தக சபை நிறுவனத் தலைவர் வி.எம்.லட்சுமி நாராயணன் பேசியதாவது:

இன்றைய மாணவர்கள்தான் வருங்கால விஞ்ஞானிகள். மேதைகளும், விஞ்ஞானிகளும், மாணவர்களாக இருந்து வந்தவர்கள்தான். அதனால், முயற்சி செய்தால் உங்களில் பலர் விஞ்ஞானி ஆகலாம். மாணவர்களை ரஷ்ய விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்லும் நோக்கம் அற்புதமானது.

அங்கு செல்லும் மாணவர்கள் வாழ்க்கை அறிவியல் பயணத்துக்கு ஒரு ஊக்கமாக இருக்கும். அவர்கள் இலக்கை நிர்ணயிப்பதற்கு முன்னோட்டமாகவும் இருக்கும். கேள்விகள், மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்கும். அதற்கு இந்த விநாடி-வினா போட்டி ஓர் அடித்தளமாக இருக்கும். கேள்விப்படாத கேள்விகளைக் கண்டு மாணவர்கள் மிரளக் கூடாது. அந்த கேள்விகளை எதிர்கொள்வதே வெற்றிதான்.இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT