தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகள் திருச்சியில் இன்று தொடங்குகின்றன.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கத் தலைவர் கே.மது, செயலாளர் ஏ.மகாலிங்கம் ஆகியோர் கூறியது:
திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கம் ஏற்கெனவே திருச்சியில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஎப்) ஆண்கள் டென்னிஸ் போட்டியை 5 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது முதல்முறையாக திருச்சியில் தேசிய அளவிலான 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் இரு பாலருக்கான ஒற்றையர், இரட்டையர் டென்னிஸ் போட்டிகளை நடத்த உள்ளது.
திருச்சியில் உள்ள யூனியன் கிளப், ஆபீசர்ஸ் கிளப் ஆகிய இடங்களில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 64 பேரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் 48 பேரும், இரட்டையர் பிரிவில் தலா 12 அணிகள் போட்டியில் பங்கேற்கவுள்ளன.
இந்தப் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரகதேஷ் சிவசங்கர், காவ்யா பழனி, லட்சுமிபிரபா, குஜராத்தைச் சேர்ந்த ருத்ரா ஹிமெண்டு, தெலங்கானாவைச் சேர்ந்த சஞ்சனா சிறிமல்லா உள்ளிட்ட பிரபல வீரர்கள்-வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.
யூனியன் கிளப்பில் பிப்.10-ம்தேதி காலை 7 மணியளவில் காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் போட்டிகளைத் தொடக்கிவைக்கிறார். இறுதிப் போட்டிகள் பிப்.15-ம் தேதி யூனியன் கிளப்பில் நடைபெறும். தொடர்ந்து அங்கு நடைபெறும் பரிசளிப்பு விழாவில், காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் செங்குட்டுவன் பரிசுகளை வழங்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் டென்னிஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலும், இளம் வயதினர் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், ஏராளமான டென்னிஸ் வீரர்கள்- வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கிலும் இந்தப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.