காரைக்கால் மாவட்டம் பண்டாரவாடை அரசுத் தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நெல் அறுவடை பணிக்குப் பின்னர் ஆர்வத்தோடு கதிரடிக்கும் மாணவ, மாணவிகள். 
நம்ம ஊரு நடப்பு

வேளாண்மை குறித்து புரிதலை ஏற்படுத்த நெல் அறுவடை நிகழ்ச்சி: ஆர்வத்தோடு கதிரடித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள்

செய்திப்பிரிவு

வேளாண்மை குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த நெல் அறுவடை நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் ஆர்வத்தோடு கதிரடித்தனர்.

வேளாண்மை குறித்த புரிதல்களை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தும் விதமாக காரைக்கால் மாவட்டம் பண்டாரவாடை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் நெல் அறுவடை நிகழ்வு நேற்று நடைபெற்றது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு விவசாயம், தோட்டக்கலை குறித்த புரிதல் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக நெல் நடவுப் பணி, தோட்டக் கலைப் பயிர்களை சாகுபடி செய்வது உள்ளிட்டப் பணிகள் மாணவர்கள் பங்கேற்புடன் பள்ளி வளாகத்தில் உள்ள சிறிய இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் சம்பா சாகுபடி செய்யும் விதமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்புடன் சி.ஆர். ரக நெல் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. வெளியிலிருந்து நாற்றுகள் பெறப்பட்டு நடவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் நாற்று விடுவது முதல் நடவுப் பணி வரையிலான இயற்கை உரமிடுதல், களையெடுத்தல், அறுவடைக் காலம் வரையிலான வேளாண் நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து அவ்வப்போது மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

இந்நிலையில், சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகின. இதையடுத்து, 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களால் நேற்று அறுவடை செய்யப்பட்டது. பின்னர் நெல்லையும், வைக்கோலையும் தனித்தனியாக பிரித்தெடுக்கும் விதமாக கதிரடிப்பு செய்யப்பட்டது.

இதில் மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு கதிரடித்தனர். இந்நிகழ்ச்சியில், பள்ளியின் பொறுப்பாசிரியர் மா.செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த நெல்லை அரிசியாக்கி மாணவர்களுக்கு பொங்கல் சமைத்து வழங்குவோம் என பொறுப்பாசிரியர் செல்வராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT