கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறுதுறை அரசு முதன்மை அலுவலர்களுடன் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படாத வகையில் அதேநேரம் ஒவ்வொருவரும் தன்சுத்தத்தை கடைபிடித்து, எவ்வித தொற்றுநோய்களும் ஆட்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள1,959 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் காலையில் நடத்தப்படும் இறைவணக்க கூட்டத்தின்போது மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள் அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக, இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிகொள்ள வேண்டும்.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுக வேண்டும். மேலும், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
நோய் அறிகுறி உள்ளவர்களின் உடல்நிலையை சம்பந்தப்பட்ட அரசுஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை பணியாளர்கள் தினசரி நேரில் சென்று பரிசோதனை செய்வதுடன், தன்சுத்தம் பேணுவதற்கும், தொற்று நீக்கம் செய்வதற்கும் தேவையான நலக் கல்வியை வழங்குகிறார்கள். இவர்கள் அனைவரும் 28 நாட்கள்வரை வீட்டிலேயே தங்கி இருக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.