நம்ம ஊரு நடப்பு

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி: கோவையில் 8-ம் தேதி தொடங்குகிறது

செய்திப்பிரிவு

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி, கோவையில் 8-ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி, கோவையில் பிப்ரவரி 8-ம் தேதி தொடங்குகிறது. இதன்படி பிப். 8-ம் தேதி தடகளப்போட்டி நேரு விளையாட்டு அரங்கிலும், 8 மற்றும் 9-ம் தேதிகளில் கைப்பந்து போட்டியும், 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை கூடைப்பந்து போட்டியும், 10 மற்றும் 11-ம் தேதி கபடி போட்டியும் மாநகராட்சி மைதானத்தில் நடைபெறுகிறது.

8, 9-ம் தேதி நீச்சல் போட்டி ஜென்னி கிளப்பிலும், 9,10-ம் தேதி டென்னிஸ் போட்டி காளப்பட்டியிலும், 8, 9-ம் தேதி ஹாக்கி போட்டியும், 10-ம் தேதி ஜூடோ போட்டியும் சரவணம் பட்டியில் நடை பெற உள்ளது.

8-ம் தேதி இறகுப்பந்து போட்டி ஆபீசர்ஸ் கிளப்பிலும், 8 மற்றும் 9-ம் தேதிகளில் குத்துச்சண்டை போட்டி மாநகராட்சி குத்துச்சண்டை மையத்திலும் நடைபெறும். இது குறித்து கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆர்.பி. ரவிச்சந்திரன் கூறியதாவது:

விளையாட்டில் சிறந்து விளங்கும்பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவித்து, அவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டியில் பங்கேற்பவர்கள் 1.1.1994 அன்றோ அதற்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, கோவை நேரு விளையாட்டு அரங்கில் சமர்ப்பிக்க வேண்டும். போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.1000, ரூ.750, ரூ.500 என ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

இத்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்பதால், போட்டியில் பங்கேற்க வரும் போது வங்கி கணக்குப் புத்தக நகல் கொண்டுவர வேண்டும்.

தடகள போட்டியில் முதலிடமும், குழுப் போட்டியில் சிறந்த மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு, மாநிலஅளவிலான போட்டிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அவர்களுக்கான சீருடை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT