புதுக்கோட்டையில் வில்லுப்பாட்டு மூலம் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுப் பாடலை பாடி அரசு பள்ளி மாணவிகள் அசத்தினர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
அப்போது, பிளஸ் 2 மாணவிகள் எஸ்.மீனா, எம்.சோபனா, 10-ம் வகுப்பு மாணவிகள் எம்.சம்சத்துல் ருஃபைதா, டி.ஜனரஞ்சனி, ஆர்.தஸிமா பேகம் ஆகியோர் வில்லுப்பாட்டு மூலம் கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, ஒரு மாணவி, ‘‘ஏ! ஏ! ஏ! சின்ன புள்ள.. என்ன புள்ள... செவத்த புள்ள...சொல்லு புள்ள... ஊருக்குள்ள இதத்தான் பேசுறாங்க, தினம் ஒன்னு ரெண்டா சொல்லி பேசுறாங்க’’ எனப் பாட, அதற்கு மற்றொரு மாணவி, ‘‘எதப்பதத்தி அப்புடி பேசுறாங்க?’’ என கேள்வி எழுப்ப, ‘‘எல்லாம் அந்த கரோனா வைரஸ பத்திதான் பேசுறாங்க...’’ எனத் தொடங்கி கரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி, பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகளை எளிதில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கிராமத்து பாடலுக்கு மெட்டுப் போட்டு பாடி அசத்தினர்.
அந்த மாணவிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பாராட்டினார். மேலும், இந்தப் பாடலை எழுதிய தமிழ் ஆசிரியை சி.சாந்தியும் பாராட்டப்பட்டார்.
கரோனா வைரஸ் குறித்து எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பாடல் வரிகள் அமைந்ததாக அங்கிருந்தோர் பாராட்டினர். முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, தலைமை ஆசிரியை பெட்லராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.