பிரதமர் மோடியுடன் கலந்துரையாட லில் பங்கேற்ற திருவாரூர் அருகே உள்ள வண்டாம்பாளை பள்ளி மாணவி வீ.ஹரிணிக்கு பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாரூர் அருகேயுள்ள வண்டாம்பாளை விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருபவர் வீ.ஹரிணி. இவர் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பரிக்ஷா பே சர்ச்சா என்ற கல்வி மற்றும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக 'உன் நம்பிக்கையைப் பொறுத்தே உன் எதிர்காலம்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆங்கில கட்டுரைப்போட்டியில் பங்கேற்றார். அதில்,அவரது கட்டுரை தேர்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வுசெய்யப்பட்டார்.
இதையடுத்து, ஜனவரி 20-ம்தேதி டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்றார். பிரதமருடனான கலந்துரையாடலில் பங்கேற்ற ஹரிணிக்கு பள்ளியின் தாளாளர் ஜனகமாலா, முதல்வர் சுஜா எஸ்.சந்திரன், ஆசிரியர்கள், மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.