தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தை அடுத்துள்ள லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். கூலித் தொழிலாளி. இவரது மகன் சரண்.
கல்லூரியில் படிக்கும் சரண், குடும்ப ஏழ்மை நிலையிலும் தடகளப் பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்று வந்தார். அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் கலந்துகொண்ட சரண், நீளம் தாண்டுதல் பிரிவில் 7.41மீட்டர் தாண்டி சாதனை படைத்ததுடன், தங்கப் பதக்கம் வென்றார்.
இவருக்கு லெவிஞ்சிபுரம் கிராமமக்கள் பாராட்டு விழா நடத்தினர். வள்ளியூர் கோட்டக் காவல் உதவிக் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத்தலைமை வகித்தார். ஊர் தலைவர் சமுத்திரம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மணிவர்ண பெருமாள், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் தங்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சரணுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.
காவல் உதவி கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் கூறும்போது, “கிராமத்தில் இருந்து மாணவர் ஒருவர் தேசிய அளவில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயம். அவரைதங்கள் வீட்டுப் பிள்ளை போல் நினைத்து, ஒட்டுமொத்த கிராமமே ஒன்றிணைந்து பாராட்டு விழா நடத்துவது அதைவிட மிகப்பெரிய விஷயம். இந்த மாணவரின் வெற்றி, கிராமத்தில் இருக்கும் மற்ற மாணவர்களுக்கு உந்துதலாக அமைய வேண்டும்.
தொடர் வெற்றிகளைப் பெற வேண்டும் என்றால் அதற்கு முறையான பயிற்சி வேண்டும். தொடர்ந்து பயிற்சி பெற்று வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்’’ என்றார்.