ஒருங்கிணைந்த ‘வைஃபை'யை வடிவமைத்த அரசு பள்ளி 8-ம் வகுப்பு மாணவி பாக்கியலட்சுமி தேசியப் போட்டிக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அறிவியல் தொழில்நுட்பத்தின் கீழ் ‘இன்ஸ்ஃபயர் மானக்' என்ற பெயரில் ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சியை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த தேசிய கண்காட்சியில் பங்கேற்க படைப்பு களை தேர்வு செய்வதற்கான மாநிலஅளவிலான ‘இன்ஸ்ஃபயர்' முகாம்புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில்,மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி8-ம் வகுப்பு மாணவி பாக்கியலட்சுமி, தனது அறிவியல் ஆசிரியர் ஜெயசுந்தரின் வழிகாட்டுதலில், ஒருங்கிணைந்த ‘வைஃபை' (wi-fi) என்ற அறிவியல் உபகரணத்தை வடிவமைத்திருந்தார். இதன்மூலம் தேசிய போட்டிக்கு அவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மாநில அளவில் இருந்து தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் ஒரே அரசு பள்ளி மாணவி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
புதிய சாதனத்தை வடிவமைத்தது குறித்து மாணவி பாக்கியலட்சுமி கூறியதாவது:
தேசிய அளவில் போட்டியில் பங்கேற்க தேர்வாகியிருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது. இதற்காக, ‘ஆல் இன் ஒன்' - ‘வைஃபை' ஆன்டனாவை வடிவமைத்தேன். இதில், வழக்கமான ‘வைஃபை' சிக்னல் பெறுவதும், அனுப்புவதும் 500 மீ வரை இருக்கும். அத்துடன் டிவி சிக்னல் கிடைத்து, அதை பார்க்க முடியும். மேலும், எஃப்எம் ரேடியோ ‘வைஃபை' சிக்னலும் இதில் கிடைக்கும்.
ஐஐடி பேராசிரியர்கள் இப் படைப்பைபார்வையிட்டு தேர்வு செய்தனர். இந்தத் தேர்வைத் தொடர்ந்து, பயிற்சிபட்டறை ஒன்று சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. பின்னர் தேசிய அளவிலான போட்டி நடக்கும். அதில் வெற்றிபெற்றால் நமதுஅறிவியல் படைப்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் முன்பு காட்சிப்படுத்தப்படும். எனது முயற்சிக்கு வழிகாட்டி ஆசிரியர்கள் ஜெயசுந்தர், உதயசங்கர் ஆகியோர் அனைத்து நிலைகளிலும் உறுதுணையாக இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
பாக்கியலட்சுமியின் அறிவியல் வழிகாட்டி ஆசிரியர்கள் ஜெயசுந்தர்,உதயசங்கர் ஆகியோரை பள்ளியின்தலைமை ஆசிரியை இளஞ்சியம்பாராட்டி கவுரவித்தார்.