அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு 30 மணி நேரம் ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காக, புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் உத்தரவின்பேரில், கோவை மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு குறைதீர் கற்பித்தல், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி ஆகிய இரு தலைப்புகளில் 4 மையங்களில் இரு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியிலும், பேரூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கணபதி சிஎம்எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், எஸ்எஸ் குளம்கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொள்ளாச்சி பழனிகவுண்டர் மேல்நிலைப் பள்ளியிலும், காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்பட்டது.
எஸ்எஸ் குளம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில், கணியூர் செல்லப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் விவிஆர் விவேகானந்தன் கருத்தாளராகப் பங்கேற்று பேசும்போது, "மாணவர்களுக்கு வாரம் ஒருவேளை ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரு நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக பிரத்யேக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாரம் ஒரு பாடவேளை வீதம், வருடத்தில் 30 தலைப்புகளின் கீழ் மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்களுக்கு கையேடு ஆங்கில வகுப்பைக் கையாளும் ஆசிரியர்களுக்கு பிரத்யேக கையேடு உருவாக்கப்பட்டு வழங்கப் பட்டுள்ளது" என்றார். கோவை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாப்பநாயக் கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில் கருத்தாளர் ஜோசப் சேவியர் ஃபயஸ் பேசும்போது, 'ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பில், பொது இடங்களில் பயன்படுத்தும் சொற்களை மாணவர்களிடம் அடிக்கடி அறிமுகப் படுத்துவதோடு, அவற்றை சரியாக உச்சரிக்கவும், பேசவும் பழக்கப்படுத்த வேண்டும்" என்றார்.