பொதுத் தேர்வெழுதும் மாணவர் களுக்கான வினா வங்கி புத்தக விற்பனை கோவையில் தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும், மார்ச் 27-ம் தேதி தொடங்கி, ஏப். 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் சிரமமின்றி பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் வகையில் மாதிரி வினாக்கள் மற்றும்முந்தைய ஆண்டு பொதுத்தேர்வுகளின் வினாக்கள் அடங்கிய, வினா வங்கி புத்தகம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வகுப்புகளுக்கான வினா வங்கி வங்கி புத்தகம் தயாரிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்துக்கும் இப்புத்தகம் கொண்டு வரப்பட்டு, தற்போது ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘எஸ்எஸ்எல்சி தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கான வினா வங்கி புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.60. இதில் அனைத்து பாடப் பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இதேபோல் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி கணிதப் பாடப்பிரிவுக்கான புத்தகம் மட்டும் வந்துள்ளது.
இதன் விலை ரூ.80. தேவைப் படும் மாணவர்கள் உரிய கட்டணம் செலுத்தி வினா வங்கி புத்தகம் பெற்றுக் கொள்ளலாம். மாணவர்களின் பெற்றோர், உறவினர், பாதுகாவலர் மாணவர்களின் பெயர், பள்ளி உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்து பள்ளி வேலை நாட்களில்புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்'’ என்றனர்.