திருப்பாவை, திருவெம்பாவை கட்டுரை போட்டியில், மாநில அளவில் 2-ம் பரிசு பெற்ற கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கவிதர்ஷினியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் பாராட்டினர்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் ‘பாவை விழா-2020’ நடைபெற்றது. இவ்விழாவில், திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்தமாணவ, மாணவிகளுக்கு மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும், 12 மாணவ,மாணவிகள் என மூன்று பிரிவுகளிலும், 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த, 12 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாநில போட்டிக்கு தேர்வானவர்களுக்கு ஜனவரி 13-ம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
32 மாவட்டங்களில் இருந்தும் 384 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி கவிதர்ஷினி கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் 2-ம் இடம் பரிசு பெற்றார். அவருக்கு ரூ. 5 ஆயிரத்துக்கான காசோலை, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
மாநில அளவிலான திருப்பாவை, திருவெம்பாவை கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவி கவிதர்ஷினியை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன், மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி ஆகியோர் பாராட்டினர். அப்போது தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.