நாகை கீச்சாம்குப்பம் மீன் பதப்படுத்தும் நிலையத்தில் மீன் மதிப்பு கூட்டும் முறை குறித்து பள்ளி மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
நாகப்பட்டினம் கலசம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் நாகை கீச்சாம்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ், நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கீச்சாம்குப்பத்தில் நடத்தப்படும் மீன்பதப்படுத்தும் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றனர்.
அங்கு மீன்களை எவ்வாறு பதப்படுத்தி, மீன் ஊறுகாய், மீன்மற்றும் இறால் பொடி, மீன் குழம்பு,மீன் பாஸ்தா போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின் றன என்பது குறித்து கேட்டறிந்தனர்.
மீன்பிடி படகுகள்
பின்னர் நாகை துறைமுகத்துக்குச் சென்று மரம், இரும்பு, பைபர், களாய் போன்ற தளவாடப்பொருட்கள் கொண்டு மீன்பிடி படகுகள் கட்டப்படுவதை பார்த்து தெரிந்து கொண்டனர்.
அதன்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் உள்ள நினைவுஸ்தூபி, அசோக சின்னம், சிதைந்தபடகு ஆகியவற்றை பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி ஆகியோரை சந்தித்து அலுவலகப் பணி குறித்து கேட்டறிந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீச்சாம்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், தேசிய நல்லாசிரியர் பாலு, பட்டதாரி ஆசிரியர்கள் வீரமணி, ராதாகிருஷ்ணன், கீதா, கலசம்பாடி பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் அ.அமலிசோபியா, எஸ்.தமிழ்மாறன் ஆகியோர் செய்திருந்தனர்.