ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக புதியவளாகத்துக்கு திருப்பூர் மாநகராட்சிபள்ளி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு அடிப்படை வசதிகளை விரைந்து செய்துதர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்தது,முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 70 ஆண்டுகளாக இப்பள்ளி செயல்பட்டு வந்தது. தற்போது பள்ளியை கே.எஸ்.சி. பள்ளிபின்புறம் உள்ள மாநகராட்சி பொதுசுகாதாரப் பிரிவில் பிறப்பு மற்றும்இறப்பு அலுவலக வளாகத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் 101 மாணவர்கள், 90 மாணவிகள் என 191 பேர் படித்து வருகின்றனர். துளசிராவ் வீதி, குப்பண்ண செட்டியார் வீதி, தட்டான் தோட்டம், காமாட்சியம்மன் கோயில் வீதி, ஏ.பி.டி. சாலை என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
பல ஆண்டு காலமாக பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த முத்துப்புதூர் பள்ளி வளாகமானது, சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி)திட்டத்தின் கீழ், பல அடுக்கு வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பெற்றோர் வேண்டுகோள்
புதிய வளாகத்தில் செயல்படும் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநகராட்சி சார்பில்பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி செயல்படத் தொடங்கி ஒருவார காலத்துக்கு பிறகு,கரும்பலகையை தயார் செய்து வருகின்றனர். தண்ணீர் வசதியில்லாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
மாநகராட்சி அதிகாரி விளக்கம்
இது குறித்து மாநகராட்சி உதவி ஆணையர் முகமது ஷஃபியுல்லா கூறும்போது, "தண்ணீர் குழாய்க்கு இணைப்பு கொடுத்துள்ளோம். சமையலறை கட்டப்பட்டு வருகிறது. ரூ. 65லட்சம் செலவு செய்து, புதிய வளாகத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. சாலையை கடப்பதற்காகவே, மாணவர்களை வேன் வைத்து அழைத்து வருகிறோம்" என்றார்.