தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் 3-ம் இடம் பெற்ற தமிழக அணி வீரர்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டினார்.
பெரம்பலூர் அருகே திருமாந்துறை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்து கொள்ளவிருக்கும் தமிழக அணி வீரர்களுக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இத்தேர்வில், பல்வேறு பள்ளிகளில் பயிலும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசங்கர், ஜாய்சன் ஜோஸ், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரெனியஸ் ஜான் டைசன், மாதவன், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ், ஜோதீஸ்வரன், பெரம்பலூரைச் சேர்ந்த முகமது காதிர் அலி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அனுஷ் அரவிந்த், கோவையைச் சேர்ந்த சிவநேசன், தர்மபுரியைச் சேர்ந்த முத்தமிழ், மதுரையைச் சேர்ந்த சக்தி தாசன், கரூரைச் சேர்ந்த தருண் ஆகிய 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜன.12 முதல் 16-ம் தேதி தேதி வரை சத்தீஸ்கர் மாநிலம் துர்க் என்ற இடத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 17 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான எறிபந்து போட்டியில் தமிழக அணி வீரர்கள் கலந்துகொண்டு 3-ம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் அணி பயிற்சியாளர் பிரபாகரன் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.