தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்ற திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவிகளை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் பாராட்டினார்.
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் (எஸ்ஜிஎஃப்ஐ) சார்பில், 2019-20-ம் கல்வியாண்டுக்கான மாநில அளவிலான கைப்பந்து, கபடி, பேட்மிண்டன், தடகளம் ஆகிய போட்டிகள் மதுரை, திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலும், தேசிய அளவிலான போட்டிகள் கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற்றன.
15 பதக்கங்கள்
இப்போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 17 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேசிய அளவில் 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலப் பதங்கங்களை வென்றனர். அவர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
மாவட்ட ஆட்சியர் வாழ்த்து
அப்போது “தொடர்ந்து பல்வேறுபோட்டிகளில் பங்கேற்று, மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்” என ஆட்சியர் வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ்குமார் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.