ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும்பாறை ஜி ஆர் வி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த முன்னாள் மாணவ, மாணவிகள். 
நம்ம ஊரு நடப்பு

மலரும் நினைவுகளில் மூழ்கிய மயிலாடும்பாறை பள்ளி முன்னாள் மாணவர்கள்

செய்திப்பிரிவு

ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும் பாறை ஜிஆர்வி அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளியில் ஒன்றுகூடி தங்கள் ஆசிரியர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.

ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும் பாறை ஜிஆர்வி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1995-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார்.

இதில் முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். பள்ளியில் படித்த காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர், முன்னாள் மாணவரும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையாளருமான கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படும் என்று முன்னாள் மாணவர்கள் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் காளிமுத்து, மகேஷ், அண்ணாமலை, முன்னாள் மாணவர்கள் லோகேந்திரன், முருகேசன், பேச்சிமுத்து, சக்திவேல், விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT