த.சத்தியசீலன்
திருவள்ளுவர் தினத்தையொட்டி 22,741 புத்தகங்களில் திருவள்ளுவரின் பிரம்மாண்ட உருவத்தை உருவாக்கி, கோவை தனியார் பள்ளி மாணவர்கள் உலக சாதனைக்கு முயற்சித்தனர். உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் தமிழ் மாதம் தை 2-ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் திருவள்ளுவரை நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கோவை மணியகாரன்பாளையத்தில் உள்ள கேம் போர்டு சர்வதேச பள்ளியில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, புத்தகங்களை அடுக்கி வைத்து, பிரம்மாண்ட திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கி, உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி, பொங்கல் மறுநாளான 16-ம் தேதி அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பிரம்மாண்ட திருவள்ளுவர் உருவாக்குவதற்கு முதலில் அவருடைய அமர்ந்த நிலையில் காணப்படும் உருவம், 120X100 அடியளவில், 1,114.82 மீ. சுற்றளவில் வரையப்பட்டது. பின்னர் மாணவர்கள் அதன்மேல் புத்தகங்களை அடுக்கி, திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு இருவகை அளவில் முன்கூட்டியே 14 வண்ணங்களில் புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி, திருவள்ளுவரின் தலை, உடற்பகுதி ஆடை என நேர்த்தியாக உருவாக்கப்பட்டது. இச்சாதனை முயற்சியில் 170 மாணவர்கள் ஈடுபட்டனர். இதற்கு 22,741 புத்தகங்கள் மொசைக் கற்களைப் போல பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. “இம்முயற்சியைப் போல் உலகின் எந்த மூலையிலும் சாதனை பதிவாகவில்லை. கடந்த மார்ச் 2018-ல் அபிதாபியில் இதேபோல் நோட்டுப் புத்தகங்களைக் கொண்டு, 702.8 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் உருவம், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
ஆனால் தற்போது 1,114.84 சதுர மீட்டர் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் உருவம், முந்தையை சாதனையை முறியடித்துள்ளதாக கருதுகிறோம். மாணவர்களின் இம்முயற்சி உலக சாதனையாக பதிவாகும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த 2017-ம் ஆண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உருவத்தை, பேப்பர் கப்பிலும், 2013-ல் அஞ்சல் அட்டையில் ராயல் வங்க புலியையும் வரைந்து, மாணவர்கள் சாதனை படைத்தனர்” என்று பள்ளி நிர்வாகிகள் அருள் ரமேஷ், பூங்கோதை, முதல்வர் பூனம் சியல் ஆகியோர் தெரிவித்தனர். பள்ளி மாணவர்களின் இச்சாதனை முயற்சியை ஏராளமானோர் நேரில் கண்டு ரசித்தனர்.திருவள்ளுவர் தினத்தையொட்டி உலக சாதனை நிகழ்ச்சிக்கு கோவையில் பள்ளி மாணவர்கள் புத்தகங்களைக் கொண்டு உருவாக்கிய பிரம்மாண்ட திருவள்ளுவர் உருவம்.படம்: ஜெ.மனோகரன்