சிவகங்கை மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் பிரம்மாண்டமான பலூன் திருவிழா, விமான கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியை கதர் கிராமத் தொழில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
காற்று நிரப்பிய பிரம்மாண்ட பலூன்களை சூடேற்றி வெளிப்புற காற்றழுத்தத்தால் இயக்கி வானில் பறக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. இதைப் பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தொழில் அதிபர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பலூன்களில் உற்சாகத்தோடு பறந்தனர்.
மேலும், மாதிரி விமானங்களின் சாகச பயணம், விமான ஓட்டுநர் பயிற்சி, காகித விமான வடிவமைப்புப் பயிற்சி, பல்வேறு நவீன விமானங்களின் கண்காட்சி நடைபெற்றன. தொடர்ந்து மாணவர்களுக்கு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவில் டி.எஸ்.பி. அப்துல் கபூர், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ சேகரன், தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன், பெண் விமானி பூர்ணா பார்த்தசாரதி, பள்ளி நிர்வாகிகள் ராமதாஸ், தட்சணாமூர்த்தி, கலைகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைவர் பால.கார்த்திகேயன் செய்திருந்தார். இந்த விழாவை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.