பள்ளிகளில் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சிகளால் மாணவர்களின் படைப்பாற்றல், சிந்தனைத் திறன் வளரும் என்று திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆ.தியாகராஜன் தெரிவித்தார். திருவாரூர் மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் செயல்முறை போட்டிகள் புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்
சிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.ஆதிராமசுப்பு தலைமை வகித்தார்.
கண்காட்சியை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆ.தியாகராஜன் பேசும்போது, "மாணவர்களை இளம் வயதிலேயே அறிவியல் அறிஞர்களாக உருவாக்கும் விதமாக மத்திய அரசின் ‘இன்ஸ்பையர்’ அறிவியல் ஆய்வுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சிகளால் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் சிந்தனை திறன் மேம்படும். அந்த வகையில் இந்த புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது’’ என்றார். டெல்லி தேசிய புத்தாக்க நிறுவனத்தின் திட்ட அலுவலர் எம்.நாகராஜன் பேசும்போது, “கண்டுபிடிப்புகளின் முக்கியத்
துவத்தைப் போற்றும் வகையில், 2010- 2020 வரையிலான 10 ஆண்டுகளை, கண்டுபிடிப்புகளுக்கான பத்தாண்டு காலம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, நடப்பாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் 32 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.10,000 வீதம் ‘இன்ஸ்பையர்’ விருது வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் தொழில்நுட்ப அலுவலர் ஆர்.பாலகிருஷ்ணன், மன்னார்குடி மாவட்டக் கல்வி அலுவலர் பா.சங்குமுத்தையா, தலைமையாசிரியர்கள் கே.கலை வாணன், தி.நாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக, மாவட்ட அறிவியல் ஒருங்கிணைப்பாளர் மு.ச.பாலு வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சி.ஜெயராமன் நன்றி கூறினார்.
மன்னார்குடி தூயவளனார் மெட்ரிக் பள்ளி மாணவர் டி.தருண் சுந்தர், வடக்குபட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி கே.யோகதர்ஷினி, திருவாரூர் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர் எஸ்.அன்புச்செல்வன் ஆகியோரின் படைப்புகள் மாநில அறிவியல் கண்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த கண்காட்சியை மாணவர்கள் ஆர்வத்தோடு பார்வையிட்டனர்.