குளித்தலை அருகேயுள்ள மேலகுட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மப்ளர், பனிக்குல்லா அணிந்த மாணவ, மாணவிகளுடன் தலைமை ஆசிரியர் முத்துசாமி, ஆசிரியை பிருந்தா மற்றும் பெற்றோர். 
நம்ம ஊரு நடப்பு

விடுப்பு எடுக்காமல் வரும் மாணவர்களை உற்சாகப்படுத்த ஊக்கப் பரிசு வழங்கும்  பள்ளி ஆசிரியை

செய்திப்பிரிவு

குளித்தலை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆசிரியை தனது சொந்த செலவில் மாதம் ஒரு பரிசு வழங்கி வருகிறார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேலகுட்டப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 34 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் முத்துசாமி, ஆசிரியை பிருந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள், கல்வி, சுத்தம், ஒழுக்கம், தூய்மை, கட்டுப்பாடு போன்றவற்றில் சிறப்பாக செயல்படும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஆசிரியை பிருந்தா ஒவ்வொரு மாதமும் சிறுசிறு ஊக்கப் பரிசுகளை வழங்கி வருகிறார்.

ஒன்று முதல் 3- வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஜூன் மாதம் டூத் ப்ரஷ், ஜூலை மாதத்தில் டங்க் கிளீனர், அடுத்த மாதத்தில் நகவெட்டி, அதன்பின் பென்சில் பாக்ஸ் என ஒவ்வொரு மாதமும் சிறப்பு
பரிசுகளை வழங்கி ஊக்குவிக்கிறார்.

மேலும், தனியார் பங்களிப்புடன், கடந்த இரு மாதங்களாக மாணவ, மாணவிகளுக்கு மாதத்தில் ஒரு நாள் இடியாப்பம், பிற நாட்களில் சுண்டல், முளைகட்டிய பயிர் போன்ற இணை உணவுகளும் இப்பள்ளியில் வழங்கப்படுகின்றன. தற்போது பனிக்காலம் என்பதால், இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் 34 பேருக்கு தலைமை ஆசிரியர் முத்துசாமி, ஆசிரியை பிருந்தா ஆகியோர் தங்களது சொந்த செலவில் மப்ளர், பனிக்குல்லா வாங்கிக் கொடுத்துள்ளனர்.

அண்மையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் மூலம் இவை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து பரிசுகள் வழங்கப்பட்டு வருவதால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருவதாக ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT