ஹரிகோட்டா சென்று திரும்பிய ஆசிரியை ஏ.ஆனந்தி, மாணவர்கள் பி.கவுதம், டி.சரண், ஆசிரியை எஸ்.ஃபெலிசியா ஜெனட். 
நம்ம ஊரு நடப்பு

பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்டதை கோவை அரசு பள்ளி மாணவர்கள் நேரில் பார்த்து வியப்பு: சென்னை விண்வெளி அறக்கட்டளை நடத்திய கட்டுரை போட்டியால் வாய்ப்பு

செய்திப்பிரிவு

த.சத்தியசீலன்

ஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி ராக்கெட்டை ஏவப்பட்டதை நேரில் கண்டுவந்துள்ளனர் கோவை செட்டிப் பாளையம் அரசு பள்ளி மாணவர்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைந்துள்ள, சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணுக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் நிகழ்ச்சி,
நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில். கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் படிக்கும் மாணவர்கள் டி.சரண், பி.கவுதம் ஆகியோர், வழிகாட்டி ஆசிரியைகள் எஸ்.ஃபெலிசியா ஜேனட், ஏ.ஆனந்தி ஆகியோருடன் கலந்து கொண்டு, ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். இது குறித்து மாணவர்களுடன் சென்று வந்த வழிகாட்டி ஆசிரியைகள் கூறியதாவது:

இவ்விரு மாணவர்களும் அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். சென்னையில் உள்ள விண்வெளி அறக்கட்டளை நடத்திய, கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, சிறப்பான கட்டுரை சமர்ப்பித்தனர். இதன்மூலம் இருவரும் ஸ்ரீ ஹரிகோட்டாவில் நடைபெற்ற பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அறக்கட்டளையினரால் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுடன் வழிகாட்டி ஆசிரியைகளாக நாங்களும் சென்று வந்தோம். விண்ணில் ஏவப்படவிருந்த ராக்கெட் சற்று தொலைவில் இருந்து பார்க்க முடிந்தது.

பின்னர் ராக்கெட் ஏவுவதை எல்இடி திரையில் பார்க்க முடிந்தது. ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தை 8 நிமிடங்கள் வரை காண முடிந்தது. இந்த ராக்கெட்டுடன் இஸ்ரேல், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் 10 செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டன. அவை பிஎஸ்எல்வி ராக்கெட்டுடன் விண்ணுக்குச் சென்று,அங்கிருந்து பிரிந்து செல்வது நன்றாகத் தெரிந்தது.

இக்காட்சியை மாணவர்கள் பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். இந்தியா விண்ணுக்கும் அனுப்பும் ராக்கெட்டுகள் ஒவ்வொரு விதமான காரணத்துக்காக அனுப்படுகின்றன. பிஎஸ்எல்வி ராக்கெட் பருவநிலை குறித்து ஆராயவும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் தகவல் தொடர்பு குறித்து அறிந்து கொள்ளவும், எஸ்எல்வி ராக்கெட் ஆராய்ச்சிக்காகவும் அனுப்பப்படுகின்றன. இது குறித்து மாணவர்களுக்கு விளக்கினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைமை ஆசிரியை ஆர்.தேவகி கூறும்போது, 'செட்டிப்பாளையம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் மிகவும் அரிது. எங்கள் பள்ளியில் மாணவர்களை எங்கு போட்டிகள் நடந்தாலும் ஆசிரியர்களுடன் அனுப்பி வைக்கிறோம். இதனால் அவர்கள் வெளியுலக அனுபவத்தைப் பெறுகின்றனர். சில போட்டிகளிலும் பரிசுகளும் பெற்று வருகின்றனர்.

அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள். அவர்களுக்கும் வெளியுலகம் தெரியாது. எனவே, தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆளாக்கும் கடமை ஆசிரியர்களையே சேருகிறது.

எங்கள் பள்ளியில் நாங்கள் எங்களால் முடிந்தவரை மாணவர்களின் முன்னேற்றத்துக்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம். கடந்த ஆண்டு தேவகுரு என்ற மாணவர் தும்பா ராக்கெட் ஏவுதளத்துக்கு சென்று வந்தார். இந்த ஆண்டு இரு மாணவர்கள்  ஹரிகோட்டா சென்று வந்து, எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்களுக்கு தொடர்ச்சியாக இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கி ணைந்து முயற்சிப்போம்' என்றார்.

SCROLL FOR NEXT